Copy
செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடர்--பகுதி 3
செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடர்

சித்ரா மூர்த்தி
(இந்தக் கட்டுரையை எழுதியவர் திருமதி சித்ரா மூர்த்தி என்பதற்குப் பதிலாக திருமதி உமா பால சுப்பிரமணியன் என்று தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டது.)
 
பகுதி 3

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள்
Vallimalai Satchidananda Swamigal
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள்
 செங்கோட்டு வேலவனைப் பற்றிக் கூறும்போது, நாம் நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டியவர் வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள்.அவரது பூர்வாசிரமப் பெயர் அர்த்தநாரி; செங்கோட்டை அடுத்துள்ள பூநாச்சி கிராமத்தில் பிறந்த அர்த்தநாரி, மலைமேலுள்ள அர்த்தநாரீஸ்வரர் திருவருளால் பெற்றோர் தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை.

இளம் வயதில் ஆன்மீகத்தில் சிறிதும் நாட்டமிருக்கவில்லை தீராத வயிற்று வலியால் தவித்தபோது, நண்பன் கூறியதற்கேற்ப பழநிமலை சென்று விரதமிருந்து சுவாமி தரிசனம் செய்துவந்தார் .ஒருநாள் தேவதாசி பாடிய திருப்புகழ்ப் பாடலில், 'சிங்கார ரூப மயில் வாகன நமோநம' என்ற வரிகள் அவரை மெய் மறக்கச் செய்தன.

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
 கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
 வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ்...மலர்போல
 
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
 கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
 வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய...லிடுமாதர்
 
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
 சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
 சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ...னுழலாமற்
 
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
 வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
 தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள்...புரிவாயே
 
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
 கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
 சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென...விருதோதை
 
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
 கங்காள வேணிகுரு வானவந மோநமென
 திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு...முருகோனே
 
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
 பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
 யின்பான தேனிரச மார்முலைவி டாதகர...மணிமார்பா
 
எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
 செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
 டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர்...பெருமாளே

 
 மலைக்கு நீர் சுமந்துவரும் மணி(சுப்ரமணியனேதானோ என்னவோ) எனும் சிறுவன் அது திருப்புகழ்ப் பாடல் என்று விளக்கிக் கூறுகிறார். அவருக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்கிறான். திருப்புகழ்க்காகவே தமிழில் தேர்ச்சி அடைந்து, திருப்புகழ்ப்பாடல்களை டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை அவர்களிடமிருந்து பெற்று மனனம் செய்து பாடி வந்தார். பிறகு அன்பர் ஒருவர் கூறியதன் பேரில் திருவண்ணாமலை சென்றார்.

 மலைமீது ரமணருக்குப் பணிவிடை செய்துகொண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்த அர்த்தநாரியைக் 'கீழே போ' என்று ரமண பகவான் உத்தரவிட்டார். 'என்ன அபசாரம் செய்தேனோ' என்று நொந்துபோய்க் கீழே இறங்கலானார் அர்த்தநாரி. மலை அடிவாரத்தில் எருமையொன்று குட்டையைக் கலக்கிக் கொண்டிருந்தது. எருமையையும் ப்ரும்மமாகக் கண்ட சேஷாத்ரி ஸ்வாமிகள் அதைத் தழுவி ஆனந்தத்தில் லயித்திருந்தார்.

முக்காலமும் உணர்ந்த ஞானிகளான ரமண பகவானுக்கும் சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கும் தெரியாதா என்ன அர்த்தநாரி யாரென்று? இவர்கள் இருவரும் இதற்கு முன்பு ஒருவரை ஒருவர் பார்த்ததுமில்லை. ஸ்வாமிகள் அர்த்தநாரியைக் கண்டதும், 'வா, உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்' என்று கூறி அவரைத் தன் மடி மேல் அமர்த்தி, சிவ மானச பூஜா ஸ்தோத்திரத்திலிருந்து சில வரிகளைச் சொன்னார்.
 
ஆத்மா த்வம் கிரிஜா மதி சஹசரா ப்ராணா சரீரம் க்ருஹம்
பூஜாம் தே விஷயோப போக ரசனா நித்ரா சமாதி ஸ்திதி:

ஸஞ்சாரப் பதயோ கோ ப்ரதக்ஷிண விதி: ஸ்தோத்ராணி சர்வாகிரோ
யத்யத் கர்ம கரோமி தத்த தகிலம் சம்போ தவாராதனம்.
  1. ஈசனே நீயே எனது ஜீவாத்மா
  2. என் புத்திதான் பார்வதிதேவி
  3. பிராணன் முதலிய வாயுக்கள் உன் பரிவாரங்கள்
  4. உடம்பே நீ வசிக்கும் கோயில்
  5. ரசிக்கும் விஷயங்களும் போகங்களும் உனக்கான பூஜை
  6. என் தூக்கமே சமாதி நிலை
  7. காலால் நடக்கும் போதெல்லாம் உனை வலம் வருகிறேன்.
  8. என் வாயிலிருந்து வெளி வருவதெல்லாம் உன்னைப் பற்றிய ஸ்தோத்திரங்கள்
  9. நான் செய்யும் காரியங்கள் எல்லாம் உனக்கு நான் செய்யும் ஆராதனையாகும்
"சொந்த நலனுக்காக ஒரு காரியமும் செய்யாமல் சிந்தனை, சொல், செயல் மூன்றையும் நம்மைப் படைத்த பரம்பொருளுக்கே அர்ப்பணித்து வாழ்ந்தால் நான் எனது, உன் உனது என்ற வேறுபாடுகள் நீங்கி ப்ரம்ம தத்துவத்தை உணர்ந்து உன்னத நிலையை அடைவாய்." என்று ஆசி வழங்கினார். பின் திடீரென்று கேட்டார் 'இது போன்ற கருத்துடைய திருப்புகழ் ஏதேனும் உளதா? என்று.

உடனே அர்த்தநாரி, 'அமலவாயு' எனத்தொடங்கும் திருப்புகழைப் பாடினார். அதில் வரும் 'எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதயபாவனாதீதம் அருள்வாயே' என்று வரும் வரிகளை விளக்கியபோது, சுவாமிகள் மிக மகிழ்ந்தார். வேதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்துக் கருத்துக்களையும் அருணகிரியார் மிக எளிமையாகப் புரியும்படிப் பாடியுள்ளாரே, உனக்குத் திருப்புகழ் ஒன்றே போதும்; வேறு எந்த மந்த்ரங்களையும் கற்க வேண்டாம்.

நீ வள்ளிமலை செல்; திருப்புகழையே உயிர் மூச்சாகக் கொண்டு தவம் செய்திரு' என்று அர்த்தநாரியை வள்ளிமலை செல்லுமாறு பணித்தார். இப்படித்தான் அர்த்தநாரி வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகளானார்.

 ஒருநாள் சுவாமிகள் கனவில் வடக்குப்பட்டு சுப்ரமணியப்பிள்ளை அவர்கள் தோன்றி 'பெருமையை வெளிபட மொழிவாயே!' என்று கூறி மறைந்தார்.

சுப்ரமணியப்பிள்ளை திருப்புகழுக்கு ஆற்றிய தொண்டு அளவிடமுடியாதது. தமிழகமெங்கும் யாத்திரை செய்து, அருணகிரிநாதரின் ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்துப் பதிப்பித்தவர் அவர் மகன் வ.சு. செங்கல்வராயப் பிள்ளை அவற்றிற்கு முதன் முதலாக உரை எழுதினார்.

அவரது மற்றொரு ஷண்முகம் பிள்ளை அவர்கள், ஆங்கிலப்புத்தாண்டு (1912ஆம் வருடம்) தினத்தன்று அன்பர்களுடன் பாடிக்கொண்டே படியேறிப் போய் தணிகேசனைத் தரிசிக்கும் வழக்கத்தைத் துவங்கி வைத்தார். அவர் கனவில் கூறியது நிச்சயம் திருப்புகழாகத் தானிருக்கும் என்று உடனே எழுந்து தேடிப்பார்த்தபோது 'தசையும் உதிரமும்' என்ற பாடலில் அவ்வரிகள் இருந்ததைக் கண்டு பிடித்தார்.

தான் திருப்புகழின் பெருமையை வெளிபட எடுத்துக் கூறி மக்களிடையே பரப்பவேண்டும் என்ற ஆணை அது என்பதை உணர்ந்து கொண்டார். அன்றுமுதல் தன் இறுதி மூச்சு வரை திருப்புகழைப் பாடியும் எளிய மெட்டுக்களில் ஏழை எளியவர்களுக்கும் கற்பித்து வருவதை தம் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டார்.

அர்த்தநாரீஸ்வரன், தன் மகன் செங்கோட்டு வேலவனின் புகழைப் பரப்ப செய்த ஒரு திருவிளையாடல் என்றே இதைக் கூறலாம்.

தசையு முதிரமு நிணமொடு செருமிய
 கரும கிருமிக ளொழுகிய பழகிய
 சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு...குடில்பேணுஞ்
 
சகல கருமிகள் சருவிய சமயிகள்
 சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்
 சவலை யறிவினர் நெறியினை விடஇனி...யடியேனுக்
 
கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு
 வசன முறஇரு வினையற மலமற
 இரவு பகலற எனதற நினதற...அநுபூதி
 
இனிமை தருமொரு தனிமையை மறைகளின்
 இறுதி யறுதியி டவரிய பெறுதியை
 இருமை யொருமையில் பெருமையை வெளிபட...மொழிவாயே
 
அசல குலபதி தருமொரு திருமகள்
 அமலை விமலைக ளெழுவரும் வழிபட
 அருளி அருணையி லுறைதரு மிறையவ...ளபிராமி
 
அநகை அநுபவை அநுதயை அபிநவை
 அதல முதலெழு தலமிவை முறைமுறை
 அடைய அருளிய பழையவ ளருளிய...சிறியோனே
 
வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி
 மவுன மருளிய மகிமையு மிமையவர்
 மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும்...வடிவேலும்
 
மயிலு மியலறி புலமையு முபநிட
 மதுர கவிதையும் விதரண கருணையும்
 வடிவு மிளமையும் வளமையு மழகிய...பெருமாளே


 திரு ஷண்முகம் பிள்ளை அவர்களைப் பின்பற்றி, 1917ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் டிசம்பர் 31ஆம் தேதி திருப்புகழ் பாடிய வண்ணம் படிகளில் ஏறி திருத்தணிகேசனை புத்தாண்டு முதல் நாளன்று தரிசிக்கும் வழக்கத்தை வள்ளிமலை ஸ்வாமிகள் ஏற்படுத்தினார். இதே போன்று குருஜி ஏ.எஸ் ராகவன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட திருப்படி விழாக்கள் இன்று நாடெங்கும் பல நகரங்களில் நடைபெறுகின்றன.

செங்கோட்டிலும் 1963ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஞாயிறன்று திருப்படி விழா கோலாகலமாக நடத்தப்படுகிறது. ஒரே ஒரு வித்தியாசம் - தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களைப் பாடும் மக்களும் தத்தம் குழுவினருடன் பாடிய வண்ணம் படி ஏறுகின்றனர்.
 
செங்கோடைக் குமரன் திருவிளையாடல்
தாமிரபரணித் தீரத்திலுள்ள குருகூர் எனும் ஊரில் பிரதிவாதி பயங்கரன் எனும் காரணப் பெயரை உடைய புலவர் ஒருவர் வசித்து வந்தார். புலமை குறைந்த பல புலவர்களிடம் வாதிட்டு அவர்களைத் தோற்கடித்த பின்பு,' நான் உனக்கு அடிமை' எனும் ஓலையை எழுதி வாங்கி வைத்துக் கொள்வார். ஒரு புலவரிடம் வாதிட எண்ணினால் தான் வருவது குறித்து அவர்களுக்கு ஓலை அனுப்புவது அவர் வழக்கம். இவருடைய செருக்கைப் பற்றி கேள்வியுற்றிருந்த பல புலவர்கள் இவரிடம் வாது புரியாமலே அடிமை ஓலை சமர்ப்பித்து வந்தனர்

பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் பலரை இவ்வாறு கொடுமைப் படுத்திய பிரதிவாதி பயங்கரன், கொங்கு நாட்டிற்கு வந்தார். திருச்செங்கோட்டில் பிரபலமாயிருந்த குணசீலருக்கு ஓலை அனுப்பி, தான் அவருடன் வாதிட விரும்புவதாகச் செய்தி தெரிவித்தார். செங்கோட்டு வேலவனின் தலைசிறந்த பக்தரான குணசீலர், அவனைத் தஞ்சமடைந்து கதறினார்.

'முருகா ஏன் இந்த சோதனை? என் புலமையெல்லாம் உனக்கே அர்ப்பணித்து வருகிறேனே, யாரிடமும் போரிட்டுப் பெற வேண்டியது எனக்கு ஒன்றுமில்லையே! பிரதிவாதி பயங்கரனிடமிருந்து நீ தான் என்னைக் காக்க வேண்டும்' என்று மனமுருகினார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய செங்கோட்டு வேலவன், 'அஞ்சற்க! பிரதிவாதியை யாமே சென்று வெல்வோம்' என்று மொழிந்தான்.

கோலாகலமாகச் சிவிகையில் அமர்ந்து திருச்செங்கோட்டை அடைந்தான் பிரதிவாதி. தோலைவில் பசுமையான மலை ஒன்று தெரிந்தது. உடன் வந்தவர்கள் இதுதான் சர்ப்பகிரி, நாகாசலம் என்றெல்லாம் அழைக்கப்படும் திருச்செங்கோட்டுமலை என்றனர். சர்ப்பகிரி என்று கேட்டதுமே, 'இது சர்ப்பமானால் ஏன் படம் எடுத்து ஆடாமல் படுத்துக் கிடக்கிறது? என்ற பொருள்பட "சமரமுகத் திருச் செங்கோடு சர்ப்ப சயிலமேன அமரில் படம் விரித்தாடாததென்னை?

எனத் துவங்கித் தொடர்ந்து வார்த்தைகள் வராததனால் பாடலை முடிக்க முடியாமலே தவித்தார். அவர் 'என்னை, என்னை' என்று தயங்கி நின்றபோது, அருகிலிருந்து 'அஃதாய்ந்திலையோ' என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்.

 "அஃதாய்ந்திலையோ நமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாட்டுயர்ந்த குமரன்,திரு (லக்ஷ்மி) மருகன் மயில் வாகனம் கொத்துமென்றே" என்று அப்பாடலை நிறைவு செய்தான் அச்சிறுவன்! அக்காலத்தில் திருச்செங்கோடு உள்ள சிறிய நாடு,எழுகரை நாடு என்றழைக்கப்பட்டது.

எழுகரைநாட்டிலுள்ள நமது குறத்தி மணாளனும், இலக்குமி மருகனுமாகிய குமரப்பெருமானது மயில் கொத்திவிடுமே என்ற பயத்தினால் தான் பாம்பு படமெடுத்தாடவில்லை என்ற சமத்காரமான அழகிய பதில் அவ்வரிகளிலமைந்தது. தன் கல்வியைக் குறித்த அகந்தையில் மூழ்கிக் கிடந்த பிரதிவாதி பயங்கரன், தோல்வியால் அவமானமடைந்தார். தன் அடியாரை அனுப்பி, சிறுவன் யார் என்று அறிந்து வரச் சொன்னார்.

 சிறுவன் கூறினான்- "இவ்வூரில் பெரும் புலவனான குணசீலரது கடைமாணாக்கன் நான்.கண்ட சுத்தி இல்லாததாலும் விரைவாகக் கவிபாடும் வல்லமை இல்லாததாலும் என்னை மாணாக்கனாக தொடர்ந்து ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.எனவே தான் மாடு மேய்க்கிறேன்! என்று சிறுவன் கூறக்கேட்ட பிரதிவாதி பயங்கரன் 'துரத்திவிடப்பட்டவனே இப்படி கவி பாடுகிறானென்றால் புலவ்ர் குரு எப்படிப்பட்ட திறமைசாலியாய் இருப்பார்' என்றெண்ணிக் கலங்கினார். ' உன் குருவுக்கு என் வணக்கங்களைத் தெரிவி' என்று சிறுவனிடம் கூறிவிட்டு வந்த வழியே திரும்பிவிட்டார்.

 முத்துசாமிக் கோனாரின் செங்கோட்டு வேலவன் மேய்ப்போனாக வந்த 'மான்மியம்' எனும் நூலில் இத்திருவிளையாடல் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. மேய்ப்போனாக வந்து ஔவையாரிடம், சுட்ட பழம் வேண்டுமா, சுடாப்பழம் வேண்டுமா என்று கேட்ட முருகப் பெருமான், இங்கு தன் பக்தனுக்கக் கவி பாடியிருக்கிறான். திருச்செங்கோட்டில் உள்ள முருகன் சாந்நித்தியத்தை இப்புராணம் நமக்குணர்த்துகிறது.

இறுதியாக மீண்டும் ஒரு முறை தலைப்பைக் கவனிப்போம். செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடர் என்கிறார். சுடர் என்றால் நாம் அறிவோம். செழும் சுடர் என்பது என்ன? வீட்டிற்குள் ஒரு விளக்கை ஏற்றிவைத்தால், அது, தான் இருக்கும் அறையில் மட்டும் ஒளி பரப்பும்.ஒரு கலங்கரை விளக்கத்தைப் பார்த்தால் வெகு தூரம் வரை கப்பலுக்கு வழி காட்டும்.
Tiruchengode Velan
ஆனால் எண்ணெய், திரி, அகல், மின்சாரம் ஏதும் வேண்டாத ஒரு ஜோதி செங்கோட்டின் மேல் ஒளிர்கிறது. அதுதான் செங்கோட்டு வேலன் எனும் செழுஞ்சுடர்- அது அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் ஜோதி. சதகோடி சூரியர்கள் உதயமெனவும், பலகோடி வெண்மதி போலவும் ஒளி வீசும் அந்த செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரை மனத்திலிருத்தி நாமும் தெளிவு பெறுவோம்.

Chitra Moorthyஇந்தக் கட்டுரையை எழுதிய திருமதி சித்ரா மூர்த்தி அவர்கள் மிகுந்த தமிழ்ப்பற்றும், முருகனிடம் ஆழ்ந்த பக்தியும் உடையவர். மேலும் அவரும் அவரது கணவர் திரு மூர்த்தி அவர்களும் திருப்புகழைப் பரப்புவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவர்கள். தலைநகர் தில்லியில் குருஜி திரு ஏ.எஸ். ராகவனிடம் பல வருடங்கள் பயின்று தில்லியின் 'மலாய் மந்திர்' என்றழைக்கப்படும் முருகன் கோயிலில் பல வருடங்கள் திருப்புகழ் வகுப்புகள் நடத்தி பல சிறந்த மாணாக்கர்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
 
சித்ரா மூர்த்தி திருப்புகழில் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.அவை 'திரி சக்தி' போன்ற மாத இதழ்களில் வெளி வந்துள்ளன. மேலும் அவர் இந்தியாவின்  பல நகரங்களில் திருப்புகழ் இசைப் பேருரைகள், சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார்.
 
குருஜி ஸ்ரீ ஏ.எஸ். ராகவன் அவர்களின் பேராசிகளுடன் திருப்புகழ் எனும் பெருங்கடலில் பரந்து விரிந்த நீர்ப் பரப்பைக் கண்டறிய முற்பட்ட திருமதி சித்ரா அவர்கள் சென்னையிலுள்ள திருப்புகழ் அடிமை திரு எஸ்.
 
நடராஜன் அவர்கள் உதவியுடன் அக்கடலின் ஆழத்திற்குச் சென்று பல முத்துக்கள் எடுக்க முடிந்ததையும் கூட தம் பெரும் பேறாகக் கருதுகிறார். அவரது திருப்புகழ் ஆய்வுப் பணி தொடர்கிறது.

வாழ்க தமிழ்! வளர்க கந்தன் புகழ்!

Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp