Copy
தைப்பூச நன்னாளின் சிறப்பு
View this email in your browser
தைப்பூச நன்னாளின் சிறப்பு
எழுதியவர் உமா பாலசுப்பிரமணியன்
English translation: "
The Significance of Thai Pusam"

தை மாதம் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமிதினம் ஒரு சிறந்த நாளாகும். இத் தினத்தில் பல நல்ல விஷயங்கள் அமைந்துள்ளன. இந் நாளில்தான் உலகம் தோன்றியது என ஒருசாரார் கூறுவர். சிவபெருமானும் உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே.தில்லை வாழ் அந்தணர்கட்கு, இருக்க இடமும், மேரு மலை போன்ற எழுநிலை மாளிகைகளையும், தேர் வரிசைகள், திருக்கோயில் கோபுரங்கள், கனகசபை முதலிய யாவும் செய்வித்து அந்தணர்கள் மூலம் திரு விழாக்களையும் நடத்தி வைத்தான் இரணியவர்மன் என்னும் மன்னன்.“தாது மாமலர் முடியாலே “ என்று

தொடங்கும் திருப்புகழில்,
வீறுசேர் வரையரசாய் மேவிய
மேரு மால்வரை என நீள் கோபுர
மேலை வாயிலின் மயில் மீதேறிய பெருமாளே...மேற்கண்ட செய்தி தெரிகிறது.
 

தில்லையில் திருக்கூத்து

மன்னன் இறைவன் திருக்கூத்தை தரிசிக்க விரும்பி, கௌடதேச அரசாட்சியை தம்பியிடம் கொடுத்துவிட்டு, பின் தில்லையிலேயே காத்திருந்தான். அதை அறிந்த வியாக்ரபாதர் இவனுக்கு புலிக்கொடியையும் தந்து சோழ மன்னனாக்கி வைத்தார்.
இதையே அருணகிரியும்.

“மநு நெறியுடன் வளர் சோணாடர் கோன் “ என இவரைக் குறிக்கிறார்.
இப்படிப்பட்ட, சூரியனின் குமாரனான மநு வழி வந்த ஐந்தாவது மநுவிற்குப் பிறந்த இரணிய வர்மன், வியாக்ரபாதருடனும், பதஞ்சலியுடனும், தேவர்களுடன் கூடி தில்லையில் திருக்கூத்தை தரிசித்தார்.இதைத்தான் அருணகிரிநாதர் “அவகுண“ எனும் திருப்புகழில்“மவுலியில் அழகிய பாதாள லோகனும்  மநு நெறியுடன் வளர் சோணாடர் கோனுடன்.

உம்பர்சேரும் மகபதி புகழ் புலியூர் வாழும் நாயகர்“ என்கிறார்.இங்ஙனம் இவர்கள் யாவருக்கும் திருக்கூத்தைக் காட்டிய நாள் தைப் பூச நாளாகும். அருணகிரியாருக்கு நடராஜரே முருகனாகவும், முருகனே நடராஜராகவும் சற்றும் பேதமின்றி தரிசனம் தரப்பட்டது என்று நோக்கிடில் நாம் போற்றுதலின்றி வேறு என்ன பேறு உள்ளது!
 
தாரகாசுரன் வதம்
முருகனை வழிபடும் ஆலயங்கள் யாவிலும் தைப் பூசம் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது. தந்தையாகிய சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையிடமிருந்து சக்தி வேலையும் பெற்று, தேவர்களுக்கு நீங்காத துயர் கொடுத்து வந்த தாரகாசுரன் என்னும் அசுரனை வென்று வீழ்த்திய நாளும் தைப் பூசமேயாகும்.
 
“தார காசுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து
சாதி பூதரங் குலுங்க முதுமீனச்
சாக ரோதையங்கு ழம்பி நீடு தீகொளுந்த அன்று
தாரை வேல் தொடும் கடம்ப !" என அருணகிரியார் திருப்புகழில் தாரகாசுரனை வீழ்த்தியது பற்றிக் கூறுகிறார்.
வேல்கொண்டு அசுரர்களை முருகன் அழித்தார் என்பதின் தத்துவத்தையும், கருத்தையும் யாவரும் அறிந்துகொள்ள வேண்டும். நம் மனத்திலே பல அசுரர்கள் குடி கொண்டு தகாத செயல்களைச் செய்கின்றனர். அதனால் சங்கிலித் தொடர்போல் நாம் மேலும் மேலும் பல வேண்டாத செயல்களைச் செய்து பாவத்துக்குள்ளாகின்றோம். முருகன் என்னும் அருளாளனை வழி பட்டால் நம் உள்ளத்தில் எழும் அழுக்குகளையும், அவலங்களையும், நமக்கு ஏற்படும் மிடிகளையும் கவலைகளையும், வினைகளையும் மற்ற எல்லா தகாத செயல்களையும் ஒரு சேர தன் ஒளி பொருந்திய கூரிய வேலால் தகர்த்தெறிவான் என்பது திண்ணம்.
 
உமையவள் முருகனுக்குக் கொடுத்த சாபம்
ஒருசமயம் பிரமனை முருகன் சந்திக்க நேர்ந்த பொழுது, பிரமன் முருகன் சிறுவன்தானே என வணங்காது நிற்க, முருகனும் அவரை யார் என்று கேட்க, நான்முகனும் தான் வேதத்திற்கு அதிபதி என்று சொன்னார். முருகன் உடனே பிரம்மனை வேதம் கூறும்படி பணித்தார். பிரமனும் “ஓம் என ஆரம்பித்தார். முருகவேள் உடனே ஓம் என்பதின் பொருளைக் கேட்க நான்முகனும் விழிக்க, அவர் குடுமியில் குட்டு விழுந்தது. அதுமட்டுமன்று தொடக்கமே சரியில்லாதபோது பிரமதேவன் எங்ஙனம் உலகத்தைப் படைப்பான் என எண்ணி அவரை கந்த வேள் சிறையில் அடைத்தார். இதைக் கண்ணுற்ற சிவபிரானும் இங்ஙனம் கேட்டார்.
 
“ஓமென உறைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ
போமெனில் அதனையின்னே புகலென இறைவன் சொற்றான்"
முற்றொருங் குணரும் ஆதி முதல்வ கேள் உலகமெல்லாம்.

பெற்றிடும் அவட்கு நீ முன் பிறருணராத வாற்றல்
சொற்றதோர் இனைய மூலத் தொல் பொருள் யாருங்கேட்ப
இற்றென இயம்பலாமோ மறையினால் இசைப்பதல்லால்
என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின் என்னத்
தன்றிருச்செவியை நல்கச் சண்முகன் குடிலை யென்னும்
ஒன்றொறு பதத்தின் உண்மை உரைத்தனன்...(கந்த புராணம்)
(வண்டாக இருந்து உணர்ந்தார் என்பதைக் குறிக்கிறது)

தந்தையார் முருகனிடம் “ உனக்கு அப்பொருள் கூற வருமோ? எனக் கேட்ட போழ்து, தம்மாற் கூற முடியும் என்றும், ஒருமுறை தந்தையான சிவபிரான் ரகசியமாகத் தாய் உமையவளுக்கு உபதேசித்த பொழுது, தாம் தாயின் கூந்தலில் ஒரு வண்டாக இருந்து அந்த ரகசிய உபதேசத்தை உணர்ந்ததாகக் கூறினார் வடிவேலன். இதை அறிந்த பார்வதியும் குழந்தையாயினும் ரகசியத்தைக் கேட்டதனால் சாபத்திற்கு உள்ளாவான் எனக் கூறியதன் பேரில், முருகனும் சாபம் தீரத் தவம் இருந்தார். அதனால் மகிழ்ந்த சிவபிரானும், பார்வதியும் கோபம் தணிந்து, காட்சி கொடுத்து சாபத்தை தவிர்த்து அருளினர். அவ்வாறு செய்த நாளும் தைப் பூசமே. முருகனின் அருள் பெற்ற திரு அருட்ப்ரகாச வள்ளலார் சிதம்பரம் ராமலிங்க அடிகளார் தை மாதம் பூச நட்சத்திரம், பௌர்ணமி அன்று தான் ஜோதி வடிவில் இருந்த இறைவனுடன் கலந்தார். யாவற்றுக்கும் மேலாக சிவபெருமான் இத் தினத்தில் தான் மும் மலங்களாகிய திரிபுரத்தை சிரித்தே அழித்தார். அதை விரிவாகப் பார்க்கலாம்.
 
பிரமன் கொடுத்த வரம்
ஒரு கால கட்டத்தில் தாரகாக்ஷன், வித்யுன்மாலி, கமலாக்ஷன் என்ற பெயர்களுடைய மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் பிரம்ம தேவனைக் குறித்து தவம் இருந்து, சிரஞ்சீவித் தன்மை வேண்டினர். ஆனால் பிரம்மனோ அது சர்வேஸ்வரனாகிய சிவபிரானுக்கு மட்டுமே உரித்தது எனக் கூறி, வேறு ஏதாவது கேட்கச் சொன்னார். அதன்படி மூவரும் விண், மண், நடு ஆகிய மூன்று இடங்களிலும் சஞ்சாரம் செய்யக் கூடிய, பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களினால் ஆன அழிவில்லாக் கோட்டைகளைக் கேட்டனர். "தை மாதத்தின் பூச நட்சத்திரத்தின் போது, முப்புரங்களும் ஒரே இடத்திற்கு, ஒரு கணத்தில் ஒரு சிறிய பகுதி நேரத்திற்கு வரும்போது சிவனால் மட்டும் அழிக்கக் கூடியதான கோட்டைகளை வேண்டுமானால் தருகிறேன் " எனக் கூறி, பிரம்மனும் வரம் கொடுத்தார். மயன் மூலமாக நகரம் நிர்மாணிக்கப் பட்டது.அவற்றுடன் சகலவிதமான போகங்களும் செல்வங்களும் அளித்து, அசுரர்களுக்கு மிகுந்த வீரமும் தைரியமும் கிடைக்க பிரம்மா அருளினார். யாவையும் நிர்மாணித்த மயன் அசுரர்களுக்கு நல்ல புத்திமதிகளையும் செய்தார். "தேவர்களுக்குத் தேவனான சிவனை சிவலிங்க ரூபமாக வழிபட்டு, இறைவனின் அன்பைப் பெறுதல் வேண்டும்.வழிபட்டவர்களுக்கு நன்மையும், எதிரிகளுக்கு அழிவையும் தருபவன் சிவன் ஆவான்," எனக் கூறி பூஜைக்குரிய சிவலிங்கங்களையும் அசுரர்களுக்குக் கொடுத்தார்.
 
அசுரர்களும் நியம நிஷ்டைகளுடன் சிவ பூஜை செய்து அவர்களுக்கு வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு தேவர்களையும், தேவிகளையும் அவர்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு, முழு உலகங்களுக்கும் அந்தப் பறக்கும் கோட்டைகளை இறக்கி, அமர்ந்து, அங்கிருந்தவர்களை நொறுக்கி அழித்து, கொடுமை செய்தனர்.இதனால் வருத்தமுற்ற விஷ்ணு, பிரம்மா, மற்றும் தேவர்கள் முதலியோர் யாவரும் மேரு மலையில் கூடி, யாகம் செய்வதற்கு முடிவெடுத்தனர். யாகத்தினின்றும் வெளிவந்த பூதங்கள் யாவும், அசுரர்களை அழிக்க முடியாது அழிந்து போயின. தங்களை அழிக்க பூதங்களை ஏவியதால் கோபமடைந்த அசுரர்கள், தேவர்கள் யாவரையும் மேலும் மேலும் துன்புறுத்தினர். அதனால் தேவர்கள் பயந்து இங்குமங்கும் அலைந்து ஓடி ஒளியும் நிலைமைக்கு ஆளாயினர். மீண்டும் திரிபுராதியர்கள் நியம நிஷ்டையுடன் செய்த சிவபூஜையினால்தான் வலுவாக இருந்த அவர்களை தோற்கடிக்க முடியவில்லை என எண்ணிய விஷ்ணுவும், பிரம்மாவும், அவர்களை சிவபூஜை செய்யாதிருக்க ஏதாவது தந்திரம் செய்ய எண்ணி, விஷ்ணு புத்தராகவும், பிரமன் சீடனாகவும் அவதரித்து, அசுரர்களுக்கு அநாசார போதனைகளைச் செய்து, அவர்களைத் தீவிர சிவ உபாசனைகளினின்றும் வழுவிடச் செய்தனர். மேலும் புத்தரே பெரும் கடவுள் என நம்பச் செய்து, சிவ வழிபாட்டுக்குரிய சாதனங்கள் யாவையும் அவர்களை விட்டு நீங்கச் செய்து, ருத்திராட்சம், திருநீறு ரட்சைகள் யாவற்றையும் களையச் செய்து, தம் தந்திரத்தில் வெற்றி பெற்றனர்.
 
ஆனால் திரிபுராதி சகோதரர்கள் மட்டும் இந்தப் புரட்டுக்கு மயங்காது, சிவ பூஜை செய்வதில் தீவிரமாக இருந்தனர். இதைக் கண்டு திடுக்குற்ற நாராயணனும், மற்ற தேவர்களும் மானசரோவர் ஏரிக்குச் சென்று, கழுத்தளவு நீரில் நின்று, ஸ்ரீ ருத்ர மந்திரத்தை ஜெபித்தனர். அதைக் கண்ணுற்ற சிவபிரான் அவர்கள் எதிரில் தோன்றி, "விரஜா ஹோமம் செய்து பெற்ற திருநீறை அணிந்து, பாசு பத விரதத்தை மேற்கொண்டால், நினைத்தது நிறைவேறும்" எனக் கூறி அருளினார். அப்பொழுது குழந்தை முருகன் தன் தந்தை மடிமீது ஆனந்தத் தாண்டவம் ஆடினார். சிவபிரான் கூறியபடியே அவர்கள் பாசு பத விரதத்தை மேற்கொண்டனர். யுத்தத்துக்கு வேண்டிய ஆயுதங்களையும், தேர், வில், மற்ற அஸ்திரங்கள் போன்றவைகளையும் நந்தி தேவர் மூலமாக சிவபிரான் தேவர்களுக்கு அனுப்பி வைத்தார். பின் தேவர்களும் யுத்தத்திற்கு ஆயத்தமாயினர்.

தேரின் அற்புதம்
மேரு மலையை வில்லாக்கி, ஆதி சேஷனை நாணாக்கி, மகாவிஷ்ணுவை அம்பு முனையாக்கி, வாயுவை அம்பின் தண்டாக்கி, அக்னி தேவனை அம்பின் பின் முனையாக்கி, விந்திய மலையை தேரின் அச்சாக்கி, கேசரி கிரியை அச்சின் குப்பியாக்கி, பூமியை தேரின் ஆசனமாக்கி, ஆகாயத்தை தேரின் உட்புறமாக்கி, சூரிய சந்திரர்களைத் தேரின் சக்கரங்களாக்கி, நான்கு வேதங்களையும் தேரின் முன் குதிரைகளாக்கி, யுத்தத்திற்குத் தயாராயினர். ரிஷிகள் பல்லாண்டு பாட, கிம்புருடர், சித்தர், யக்ஷரர், நல் வாக்கு கூற, கருடர், சாரணர், கந்தருவர், திருப்புகழ் பாட, மகா நாகங்கள், எட்டு பர்வதங்கள், சமுத்திரங்கள், மேகங்கள், தேரின் மேற் பகுதிகளாகவும், கவசங்களாகவும் ஆயின. மற்ற உதிரி பாகங்களாக அறுபத்து நான்கு சாஸ்திரங்கள். காமதேனு, கர்மங்கள், திதி, யாகங்கள், தர்மங்கள், யுகங்கள், வருடங்கள், மாதங்கள், நாட்கள், ருதுக்கள் ஆயின. பிரணவத்தை சவுக்காக ஏந்தி, பிரம்ம தேவர் தேர்பாகனாகி தேரில் அமர்ந்தார்.
 
விநாயகரை வணங்காததால் வந்த வினைVinayagar
தேவர்களும், அவர்களின் தலைவர்களும் சேனைகளாயினர். நந்தி தேவர் இவ்விவரங்களைச் சிவபிரானுக்குக் கூற, அவரும் தன் கையில் வில்லையும், அம்பையும் ஏந்தி, தேரின் மீது ஏறினார். ஆனால் ஏறிய உடனேயே தேரின் அச்சு முறிந்து, தேர் பூமியில் அழுந்தியது. தேர் மேலும் அழுந்தாதிருக்க திருமால் காளை வடிவம் பூண்டு தேரைத் தாங்கிக் கொண்டார். இதையே அருணகிரிநாதர் தம் திருப்புகழில், "முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா" என வினாயகரை வணங்காததால் வந்த வினையைச் சுட்டிக் காட்டியுள்ளார். விநாயகரை வணங்காத தன் தவறை உணர்ந்து, சிவபிரான் கணேசனை வணங்கி பூஜை செய்த பின், தேரில் அமர, இருபுறமும் வினாயகரும், முருகனும் தங்கள் வாகனங்களுடன் பவனி வர, தேரும் புறப்பட்டது.

ஆசாரத்தைக் கைவிட்ட அசுரர்களின் செல்வங்கள் யாவும் மறைந்து போயின. குறிப்பிட்ட நேரம் வந்த போது, முப்புரங்கள் யாவும் ஒரே இடத்தில் ஒன்று கூடின. கையில் அம்பின் முனையைப் பிடித்தவாறு சிவபிரான், தன் முக்கண்ணால் முப்புரங்களையும் பார்த்துச் சிரித்து விழிக்க, அவை உடனே சாம்பலாயின. அசுரர்கள் முன்பு சிவபிரானை வழிபட்டதால், அவர்கள் மடியாமல், சிவபிரானின் கருணையினால் சிவ கணங்களாக மாறினர்.
 
ஒன்றும் நேராத திரிபுர சகோதரர்களும் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி, சிவபெருமானை தஞ்சம் புகுந்ததால், அவர்கள் சிவபிரானின் துவார பாலகர்களாயினர். திரிபுர சம்ஹாரம் நடைபெற்றது தைப்பூச நன்னாளில் தான். சூரபதுமனை அழிக்க முருகன் தன் தாயிடமிருந்து வேல் பெற்ற நாளும் தைப் பூச நாளாகும். சிவன் எவ்வாறு திரிபுரம் எரித்தான் என்பதை சில திருப்புகழ் பாக்களினூடே பார்க்கலாம்.
"பொடிபடப் பட நெடிய விற்கொடு புரமெரித்தவர்"
 
மேருவை வில்லாகக் கொண்டது"சிலையென வடமலை யுடையவர்."
"புன்மையர் புரத்ரயத்தர் பொடியாகப் பொன் மலை வளைத்தெரித்த கண்ணுதல்" 
"மலை சிலை பற்றிய கடவுள்"
 

திரிபுரம் எரித்தது

"ஆட்டி வடவரை வாட்டி யரவொடு பூட்டி திரிபுரம் மூட்டி"
"சிந்தி முன்புரக் காடு மங்க நகை கொண்ட தழற் கோலர்."
"அன்றெயில் தீப்பட அதிபார வாடை நெடுங்கிரி கோட்டிய வீரன்."
"எரிபுர மூணது புக நகையேவிய நாதர்".
"ஒண்புரம் பொடிகண்ட எந்தையர்" என்று பல இருக்கின்றன.
 
திரிபுராதியருக்கு அருள் புரிந்தமை திருப்புகழில் சில பார்க்கலாம்.
"அரண மதிள் சூழ் புரத்திருந்து கருதுமொரு மூவர்க்கிரங்கி அருளுமொரு நாயகன்"
"பறவை என்கிற கூடார் மூவரண் முறையிடுந் தமர் வானோர் தேரரி பகழி குன்ற விலாலே நீறெழ வொருமூவர் பதநினைந்து விடாதே தாள் பெற அருள் புரிந்த பிரானார் மாபதி"

இவைகளைப் போல் பல உள்ளதை அறியலாம்.  à®‡à®ªà¯à®ªà®Ÿà®¿à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ தைப்பூச நன்னாளில் யாவரும் முருகனை வழிபட்டு அவன் அருளைப் பெறுவதற்கு முயன்றால் மும்மலங்களையும் அழித்து இறைவனின் அன்புக்குப் பாத்திரமாவோ.

More about Thai Poosam festival

Facebook
Facebook
Email
Email
Murugan.org
Murugan.org
Palani.org
Palani.org
Tiruchendur.org
Tiruchendur.org
Kataragama.org
Kataragama.org
Share
Forward to Friend
Copyright © 2014 Murugan Bhakti, All rights reserved.


unsubscribe from this list    update subscription preferences 

Email Marketing Powered by Mailchimp