Copy
செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடர்--பகுதி 1
செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடர்
உமா பாலசுப்பிரமணியன்
பகுதி 1

செங்கேழுடுத்த சின வடி வேலுந் திருமுகமும் பங்கே
நிரைத்த நற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியும் செங்கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கே யென்முன் வந்தெதிர் நிற்பனே

Arunagirinathar
அருணகிரிநாதரும் அறுசமயமும்
செங்கோட்டில் வாழும் செழும் சுடரான செங்கோட்டு வேலனை தம் பாக்களால் நமக்கு அறிமுகப்படுத்திவைத்த அருணகிரிநாதர். நாம் காலத்தால் சற்றுப் பின்னோக்கிச் செல்கையில், நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடிய காலத்தில் முருகன் தமிழ்க் கடவுளாக, தமிழரின் வழிபாட்டிற்குரியவனாக விளங்கினான். திருமுறைகள் தோன்றிய காலத்தில் சிவ வழிபாடு சிறந்து விளங்கியது. ஆனால் ஒரு காலகட்டத்தில் பிற சமய ஆக்ரமிப்பினால் இவை அனைத்துமே குன்றத்தொடங்கின. அப்போது தான் இன்றைக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு அருணகிரிநாதர் அவதரித்தார்.

சைவம் தழைக்க வேண்டும், முருகவழிபாடு சிறப்புற வேண்டும் என்று மட்டுமல்லாமல், ஆதிசங்கரர் ஸ்தாபித்த அறுசமய- காணாபத்யம், கௌமாரம், சௌரம், வைஷ்ணவம், சைவம், சாக்தம்- வழிபாடும் சிறப்புற்று மக்களிடையே சமய சமரசக் கொள்கையை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரு பெரும் பொறுப்பைச் சுமக்க வேண்டிய நிலை அருணகிரியாருக்கு ஏற்பட்டது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தலங்கள்தோறும் நேரே சென்று மக்களிடையே பக்தியைப் பரப்பினர். அவர்களைப் பின்பற்றி அருணகிரியாரும் தலயாத்திரை மேற்கொண்டபோது சென்ற இடங்களுள் ஒன்றுதான் திருச்செங்கோடு. அது நாம் செய்த பெரும் புண்ணியம்.

"பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள பக்தர்கள், அற்புதம் ஓதும் சத்த மிகுத்த திருப்புகழை" உலகெங்கும் பரப்ப, "தத்துவ தற்பர முற்றும் உணர்த்திய சர்ப்பகிரிப் பெருமான்" அவருக்கு வழி காட்டிக் கொடுத்தான். இன்று நாமும் அவருடன் செங்கோடைக் குமரனைத் தரிசிப்போம்.
Tiruchengode Sivan Kovil
திருச்செங்கோட்டின் சிறப்பு
 முருகப் பெருமான் உறையும் தலங்களுள் மலையின் பெயரும் ஊரின் பெயரும் ஒன்றாக உள்ள பல தலங்களை நாம் அறிவோம். ஒருவர், பழனி அல்லது சுவாமிமலைக்குச் சொந்த அலுவல் காரணமாகப் போகிறார் என்றாலும், முருகனைத் தரிசிக்கப் போகிறீர்களா என்றுதான் நாம் கேட்போம். அது போன்ற ஒரு தலம் திருச்செங்கோடு. ஊரை அடுத்துள்ள மலையை, அருணகிரியார் ' தெய்வத் திருமலைச் செங்கோடு' என்கிறார்.

காரணம் முருகப்பெருமான்,இங்கு தம் தாய் தந்தையரோடும், மாமன் மாமியருடனும், ராம பக்த ஹனுமானுடனும் சேர்ந்து குடி கொண்டுள்ளார். தவிரவும், அர்த்த நாரீஸ்வரரை மூலவராகக் கொண்டுள்ள ஒரே கோயில், தமிழகத்தில் இதுமட்டுமே என்று கூறுகிறார்கள். அப்படி இருந்தபோதிலும் எந்த விழாவிலும் செங்கோட்டு வேலவனுக்கே முதல் மரியாதை அளிக்கப்படுகிறது என்பது மற்றொரு சிறப்பான விஷயம்.

செம்மை- சிவந்த, கோடு-மலை. சிவந்த ம்லை எனப் பொருள்படும். ஆனால் நகரின் மேலவீதியிலிருந்து பார்த்தால் பாம்பு படுத்திருப்பது போன்ற தோற்றம். எனவேதான் அருணகிரியார் தம் பாடல்களில் அரவகிரி, நாகாசலம், சர்ப்பகிரி, கொங்கின் புஜககோத்திரி என்றெல்லாம் குறிப்பிடுகிறார். ஞானசம்பந்தராலும் பாடப்பெற்ற இத்தலம் அன்று திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்றழைக்கப்பட்டு வந்தது.

திருவண்ணாமலையில் சிவகுமரனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு 'என் புகழைப் பாடுவாயாக' என்ற அவன் ஆணையை ஏற்றுத் தமிழகமெங்கும் யாத்திரை செய்கிறார் அருணகிரியார்.காவிரிக்கரையில் பயணிக்கும்போது சற்றுத் தொலைவிலுள்ள செங்கோடு அவர் கவனத்தை ஈர்க்கிறது. காவிரிக் கரையிலா இருக்கிறது திருச்செங்கோடு என்று கேட்பவர்கள் உண்டு.

வீட்டுப்படி இறங்கியதுமே, (லிப்டிலிருந்து என்று கூறலாம்) வாகனத்தில் அமர்ந்து போகும் நமக்கு எந்த மோட்டர் வாகனமும் இல்லாத காலத்தை நினைத்துப் பார்க்கவே முடியாது.அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைப் பயணம் என்பது வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாக இருந்தது. காவிரிக்கரையிலிருந்து சுமார் பத்து மைல் தூரமுள்ள செங்கோடு வரை நடப்பதென்பது மக்களுக்கு, குறிப்பாக ஆன்மீகவாதிகளுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. இது நமது அன்பிற்குரிய வாகீச கலாநிதி அவர்களின் கருத்து! ஏன், உதாரணத்திற்கு வதன சரோருகம் எனத்துவங்கும் பாடலை எடுத்துக் கொள்வோமே!

முருகன் வள்ளியைப் பார்த்து, 'வாராய், பதி காதம் காதரை ஒன்றும் ஊரும் வயலும் ஒரே இடை' என்றல்லவா கூறுகிறார்! "வள்ளி! உன் ஊருக்கும் அதாவது வள்ளிமலைக்கும், நான் இருக்கும் திருத்தணிக்கும் இடையில் உள்ள தூரம் 25 மைல் தான்" என்கிறார். காதம் என்றால் பத்து மைல், காதம்+ காதம்+ அரை என்றால் 25 மைல் "அவ்வளவு தூரம் தான், வாயேன்" என்று இறைஞ்சுகிறாரே! சென்ற நூற்றாண்டின் இறுதியில்தான் செங்கோட்டிற்கு வாகனப்பாதை அமைக்கப்பட்டது. இன்றும் 1200 படிகள் ஏறி முருகனைத் தரிசிக்கச் செல்பவர்கள் ஏராளம். மலையில் அறுபது அடி உயர பாம்பு சிற்பம் உள்ளது.

பாம்பு திருமாலுக்குப் படுக்கை, சிவனுக்கு ஆபரணம், விநாயகருக்கு உதரபந்தனம், ஆனால் முருகனே நாகம்! (உதாரணம் சுப்ரமண்யா) மலைப்பாதையின் படிகள் துவங்குமிடத்தில் ஆறுமுகக் கடவுள் தரிசனம்; சற்று ஏறிப்போய் அறுபதாம் படியில் சுப்ரமண்யசாமி தரிசனம். தொடர்ந்து ஏறிச் சென்று பார்த்தால் செங்கோட்டு வேலவன் தரிசனம். இவ்வாறாக முருகன் அருணகிரியாருக்குத் தொடர்ந்து காட்சியளித்து ஆசீர்வதித்தான்.

சத்ய வாக்குப் படிகள்
மலையிலுள்ள அறுபதாம்படி என்ற இடத்தில் செங்குத்தான பாறையின் மீதுள்ள அறுபது படிகளின் இருபுறங்களிலும் திரி இட்டு எண்ணெய் ஊற்றுவதற்கு வசதியாகப் பள்ளங்கள் உள்ளன. கொடுக்கல் வாங்கலில் தமக்குள் வேறுபாடு வரும்போது ஊர்மக்கள் இந்தப் படிகளில் விளக்கேற்றி சத்யப்ரமாணம் செய்வது நீண்டநாள் வழக்கமாம். சுப்ரமணிய சாமியைத் தர்மசாட்சியாய்க் கொண்டு வழக்குகளைத் தீர்த்துக் கொள்வதால் இவை சத்ய வாக்குப் படிகள் என்றழைக்கப் படுகின்றன.

இம்முடிவை ஏற்றுக் கொள்ள உயர்நீதிமன்றமும் கடமைப்பட்டிருந்தது என்பதை ஆங்கிலேய ஆட்சியாளராக இருந்த F. J. Richards தமது மாவட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாராம்! இவற்றை வைத்தே ஒரு செங்கோட்டுப் பாடலில் தர்க்க சாத்ரத் தக்க மார்க்க சத்யவாக்யப் பெருமாளே! என்று அருணகிரியார் பாடியிருக்கலாம்.

செங்கோட்டுப் படிகளில் ஏறி, மலையின் உச்சியை அடையும்போது வடக்கு நோக்கி அமைந்துள்ள கம்பீரமான ராஜகோபுரம் காட்சி அளிக்கிறது. இங்கு நின்று கொண்டுதான் அருணகிரிநாதர் செங்கோட்டின் பசுமை அழகைப் பார்த்திருக்கவேண்டும்.'சேல் ஆர் வயல் பொழில் செங்கோடு, செஞ்சாலி- கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு' , என்றெல்லாம் பாடியுள்ளார்.

படி ஏறிச் செல்பவர்கள் வடக்கு வாயில் வழியாகவும் வாகனப் பாதையில் வருபவர்கள் மேற்கு கோபுர வாயில் வழியாகவும் கோயிலுள் நுழையலாம். வடக்குக் கோபுர வாயிலிலிருந்து இருபது படிகள் கீழே இறங்கிச் சென்றால் சமதளம் வருகிறது. இங்கு நுழைந்ததுமே நாம் பார்ப்பது வேலவன் சந்நிதிக்குச் செல்லும் பாதை. அழகான மண்டபத்திலுள்ள மயில் சிற்பமும், த்னி த்வஜஸ்தம்பமும் நம் கவனத்தைக் கவருகின்றன.

நாகாசல வேலவன்
வேலன் சந்நிதியில் நுழைவதற்கு முன் இருபுறமுமுள்ள விநாயகரையும் அருணகிரிநாதரையும் வணங்குகிறோம். அருணகிரிநாதரைப் பார்த்ததுமே மனதில் சந்தேகம் வருகிறது. வேறு எந்த ஊரைப் பற்றியுமே குறிப்பிடாத கந்தர் அனுபூதியில் நாகாசல வேலவனைப் பற்றி மட்டும் கூறியிருக்கிறாரே ஏன்?

"கூகா என என் கிளை கூடி அழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா!
நாகாசல வேலவ! நாலுகவித்
த்யாகா! சுரலோக சிகாமணியே!"
என்கிறார்.

ஏன் நாகாசலத்தை மட்டுமே குறிப்பிட்டார் என்ற கேள்விக்கு விடை தேடும் போது இரண்டு கருத்துக்கள் தோன்றுகின்றன.
(1) செங்கோட்டு வேலவரே!
ஆசு, மதுரம், சித்ரம், விஸ்தாரம் எனும் நான்குவகைக் கவிகளையும் பாடும் ஆற்றலைப் பக்தர்களுக்கு அளிப்பவரே!
தேவலோகத்தினரின் சிரோ ரத்னமாகத் திகழ்பவரே!
'அன்று நான் திருவண்ணாமலைக் கோயில் கோபுரத்திலிருந்து குதிக்க இருந்தபோது, என்னைத் தங்கள் திருக்கரங்களால் தாங்காமல் இருந்திருந்தால் நான் இறந்துபட்டு, எனது சுற்றத்தார்கள் பலரும் என் சடலத்தைச் சுற்றி நின்று கூகா என இரைச்சலிட்டுப் பறைகள் கொட்டி இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரியூட்டி பின் நீரில் மூழ்கி நினைப்பொழிந்திருப்பார்கள்; அவ்வாறு ஆகாமல் என்னைத் தாங்கிப் பிடித்து, இங்கு ஆசுகவி,சித்ரகவி, மதுரகவி, விஸ்தாரகவி எனும் நால்வகைக் கவிகளால் உம்மைப்பாடும் திறமையையும் தந்தீரே' என்று நன்றி கூறும் விதமாகப் பாடியுள்ளார்.
(2) இரண்டாவது கருத்து- இது மதிப்பிற்குரிய கி.வா.ஜ அவர்கள் கூறியது. பலப்பல இடங்களுக்கும் சென்று பாடிய அருணகிரியார் அங்கங்கே ஒரு விண்ணப்பமும் போட்டு வைத்தார். திருச்செங்கோட்டில் அவர் பாடிய கந்தர் அலங்கார விண்ணப்பம் என்னவென்று பார்க்கலாமா

கந்தர் அலங்கார விண்ணப்பம்

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம் பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து காத்தருளே


இந்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே என்று பாடுகிறார். அந்த விண்ணப்பம் அப்படியே பலித்தது. பௌதிக உடல் இறந்துவிட உயிர் பிரிவது இயற்கை. "இந்த மாதிரி மரணம் தனக்கு வேண்டாம், அவ்வாறு மரணம் சம்பவிக்குமானால் அதற்கு முன்பே நீ வந்து என்னை உன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

ப்ரபுடதேவமாராஜனுக்காகப் பூத உடலை விட்டுவிட்டு கிளிரூபத்தில் இந்த்ரலோகம் சென்று திரும்பிய அருணகிரியார், வந்து பார்த்தபோது தன் உடலை சம்பந்தாண்டான் எரித்துவிட்டான் என்றறிந்து அப்படியே சென்று முருகன் கையில் அமர்ந்துவிட்டார். சுகசொரூபமாக முருகன் கையில் இருந்தபடிப் பாடிய கந்தர் அனுபூதியில் இதனால்தான் நாகாசல வேலவனை மட்டும் மறக்காமல் பாடிவிட்டார் என்பது கி.வா.ஜ அவர்கள் கருத்து. இறவா வரம் பெற அவர் விண்ணப்பம் செய்த இடமல்லவா அது!

மேற்கூறிய எண்ணங்கள் எழும்போது வேலவனைத் தரிசிக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது. தீப ஒளியில் வேலவனைத் தரிசிக்கும்போது முதலில் நம் மனத்தில் தோன்றுவது ஒரு கந்தர் அலங்காரச் செய்யுள் தான்

செஞ்சேவல் கைக்கொண்ட செங்கோட்டு வேலவன்

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோ டனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே


இவ்வரிகள் நம்மை மெய்ம்மறக்கச் செய்கின்றன. எத்தனையோ கோயில்களுக்குச் சென்று தரிசித்திருக்கும் அருணகிரியார் ஏன் இங்கு மட்டும் இவ்வாறு பாடினார்? மற்ற மூர்த்தங்களைப் போலல்லாமல் முருகன் கைவேல் கல்லிலேயே சிற்பியால் வடிக்கப் பட்டுள்ளது. மற்றொரு கையில் சேவல் கொடியைப் பார்க்க முடியாது. சேவலே மிகப்பாந்தமாக அவனது இடக்கையில் அமர்ந்துள்ளது. அதனால்தான் எல்லாப் பாடல்களிலும் மயிலில் ஏறிவா என்று பாடுபவர் இங்கு மட்டும் செஞ்சேவல் கொண்டு வரவேணும் என்று பாடுகிறார். இப்போது அந்தப் பாடலைக் கேட்போம்
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
 ஐம்பூத மொன்ற...நினையாமல்
 
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
 ளம்போரு கங்கள்...முலைதானும்
 
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
 கொண்டாடு கின்ற...குழலாரைக்
 
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
 குன்றா மலைந்து...அலைவேனோ
 
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
 வம்பார் கடம்பை...யணிவோனே
 
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
 வம்பே தொலைந்த...வடிவேலா
 
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
 செஞ்சேவல் கொண்டு...வரவேணும்
 
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
 செங்கோ டமர்ந்த...பெருமாளே

 
"எங்கே நினைப்பினும் என்முன் வந்தெதிர் நிற்பனே, கந்தா எனும்போ செஞ்சேவல் கொண்டுவரவேணும்"- என்ன ஒரு முறுகிய பக்தி நிலை! ஒரு பாடலில் குக்குடாத்த சர்ப்பகோத்ரவெற்ப! வேல் கைக் குமரேசா! என்கிறார். கருமான் மருகனை எனத் துவங்கும் கந்தர் அலங்காரத்தில் "கருமான் மருகனை, செம்மான் மகளைக் களவு கொண்டு வரும் ஆ குலவனை...சேவல் கைக் கோளனை..." என்கிறார். சேவலைக் கையில் பிடித்திருப்பவன் என்பது பொருள்.

(To be continued in Part 2 of 3 Parts)
 
Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp