Copy
பக்தித் துறை

பக்தித் துறை

'நாளும் கோளும் நன்மையே செய்யும்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல அடியார் அவர்க்கு மிகவே" என்றார் அப்பர் பெருமான் என்பதற்குப் பதிலாக சம்பந்தர் பெருமான் என்றிருந்திருக்க வேண்டும். பிழைக்கு வருந்துகிறோம்.

உலகத்தில் மக்களிடையே இரண்டு கட்சிகள் உள்ளன. ஒன்று ஒளியை நோக்கிப் போகின்றது, மற்றொன்று இருளை நோக்கிப் போகின்றது. ஒரு பக்கத்தில் கரை காண முடியாத எல்லையில்லா இன்பக்கடல் ஓங்கி நிற்கின்றது. மற்றுமொரு பக்கத்தில் பிறவிப் பெருங்கடல் இருக்கின்றது. பிறவிப் பெருங்கடலில் துன்பத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை மக்களாகிய நாம் அறிந்துள்ளோம். ஆனால் இறைவன் கருணையினால் இன்ப அனுபவம் பெற்ற பெரியோர்கள் இன்பக் கடலை அறிந்திருக்கிறார்கள்.

வாழ்க்கையெனும் மேடு
       பிறவிப் பெருங்கடலுக்கும், ஆனந்தக் கடலுக்கும் நடுவிலே, குண்டும் குழியும் நிறைந்த, அழுக்கு நிரம்பியுள்ள வாழ்க்கையெனும் மேட்டில் நாம் இருக்கிறோம். அதில் புத்தியாகிய ஆறு ஓடுகிறது. மனிதப் பிறவியில் உடம்பிலும், உடையிலும் ஒட்டிக் கொள்ளும் அழுக்கைப் போல, உள்ளத்தில் ஒட்டிக்கொள்ளும் அழுக்கானது உயிரைச் சார்ந்திருக்கிறது. உயிர்களிடத்தில் மும்மலங்கள் உள்ளன. மனம் இருப்பதனால்தான் மனிதன் எல்லாக் காரியங்களையும் செய்கிறான். மனம் இறந்து போய்விட்டால் மலங்களும் அழிந்து போகின்றன.

மனத்தின் தவிப்பு
      மனத்தின் கொழுந்து எதுவோ அதைப் புத்தி என்று சொல்வார்கள். நாம் வாழ்வதற்குரிய கருவிகள் இரண்டு வகையாகும். கை கால்கள் முதலிய உறுப்புகள் புறத்தே உள்ளன. அகத்தே உள்ள கரணங்களுக்கு அந்தக் கரணங்கள் என்று பெயர்.அவைகள் நான்கு பகுதிகளாகப் பயன்படுகின்றன. அதாவது, ஏதாவது ஒரு பொருளைப் பற்றிச் சிந்தித்து அதனிடத்தில் ஈடுபடுவதைச் சித்தம் என்கிறோம். அப்பொருளை எவ்வாறு பெறுவது என்ற தவிப்பே, மனம் ஆகும். பின் ஒரு பொருளைப் பார்த்தால் நல்லதா, கெட்டதா என ஆராய்ச்சி செய்கிறோம். இங்ஙனம் ஆராய்ச்சி பிறக்குமிடம் தான் புத்தியாகும்.

நாம் இன்னார், என்பதை எப்பொழுதும் அறிந்து வைத்துக் கொண்டு தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் நாம் இன்னார் என்ற நினைவோடு எழுந்திருக்கிறோம். அந்த நினைவுள்ள பகுதிதான் அகங்காரம். இப்படி மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு பகுதிகளாக அந்தக் கரணம் இயங்குகிறது. புத்தியினால் இது நல்லது, இது பொல்லாதது எனத் தெரிந்துகொள்கிறோம். அதனால் சித்தமும் அதனுடன் ஒற்றுமையுடன் சேர்ந்து செயல் படுகிறது. ஆனால் பொல்லாத மனம் தாவித் தாவிச் செல்கிறது, அதனால் துன்பங்கள் உண்டாகின்றன.

பக்தித் துறையில் கலந்தால் புத்தித் தரங்கம் தெளியும்
 புத்தியாகிய சிற்றாறு வளைந்து, வளைந்து இன்பக் கடலுக்கும் பிறவிக் கடலுக்கும் நடுவே செல்லும் பொழுது, அங்கங்கே அழுக்கைச் சேர்த்துக் கொண்டு போகிறது. ஒரு பெரியவர் அதன் எதிரில் வந்து “ ஏனப்பா! இந்த அழகான சிற்றாற்றை இப்படி அழுக்காக வைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்றார். “எனக்கு எப்படி அழுக்கைப் போக்கிக்கொள்வது என்று தெரியவில்லை, நீங்கள் சிறிது கூற முடியுமா?” என்றது புத்தியான ஆறு.

“அழுக்கு நீரை உன்னால் வடிகட்டிச் சுத்தம் செய்வது என்பது முடியாத காரியம். அதைத் தெளியவைத்துச் சுத்தம் செய்யும் ஒரு பெரிய கடல் இருக்கிறது. அதுதான் ஆனந்த வாரி. அதோடு நீ கலக்க வேண்டும்.” சரி ! புத்தியாகிய சிறிய ஆற்றை ஆனந்தவாரியோடு கலக்கலாம் என்று கிளம்பினால், காமம், மோகம், மதம்,மாச்சரியம் போன்ற துறைகளே கண்களில் தெரிந்தன. பிறவியாகிய அழுக்குக் கடலோடு அறிவாகிய ஆற்றைச் சேர்ப்பதனால் எவ்வாறு அது தெளிவடையும் ?என்ற சந்தேகமே எழுந்தது.

       "பெரியவரே ! ஆனந்த வாரியின் துறை எனக்கு அகப்படவில்லை. பிறவிக்கடல் துறைகள்தான் எனக்குத்தெரிந்தன ஆனந்தவாரிக்கும் துறைகள் உண்டா?” "ஆம்! ஞானம், கர்மம், பக்தி என்று மூன்று துறைகள் உள்ளன. பாலை வனத்தில் ஆறு கடக்கும் போது புது நீர் ஓட்டம் எப்போதும் இருக்க வேண்டும் இல்லை யெனில், ஆனந்தவாரியைச் சேர முடியாது. அதனால் ஞான மார்க்கம் கடினமாகும்” என்றார் பெரியவர்.    
                                                          
       "ஞானமாகிய துறை உனக்குப் பயன்படாது அப்பா. கர்மம் என்ற மற்றொரு துறை இருக்கிறது ஆனால் அது மேட்டிலே இருக்கிறது. பள்ளத்திலிருந்து மேட்டில் ஏறுவது அவ்வளவு எளிதல்ல. அதுவும் உனக்குச் சரிப்படாது. ” விழித்தது புத்தி ஆறு. அப்பொழுது வேறு வழியே இல்லையா?    

       “ஞானமும், கர்மமும் வேண்டாம். பக்தி என்ற ஒரு துறை இருக்கிறது. அந்த பக்தித் துறை வழியாக எளிதில் ஆனந்தவாரியோடு கலந்து,புத்தித் தரங்கம் தெளியும்படியாகச் செய்துவிடலாம். கவலைப் படாதே! ” என்று சொல்லி மறைந்தார்.

அதற்கு மறுபடியும் சந்தேகம் வந்தது. புத்தியாகிய அழுக்கு ஆறு ஆனந்த வாரியுடன் கலந்தால் ஆனந்த வாரியும் அழுக்காகி விடுமே !
 எங்ஙனம் யமுனை புனித கங்கையுடன் கலந்தால் புனித கங்கையாகி விடுகிறதோ அவ்வாறே அழுக்கு நிரம்பிய புத்தித் தரங்கம் ஆனந்த வாரியுடன் கலந்து விட்டால் களவு, கோப ம் போன்ற அனேககெட்ட வாசனைகளும் போய் ஆனந்தவாரியுடன் கலந்து, பிறகு ஆனந்த வாரியின் மணமே மிஞ்சும். மனிதனையும் விலங்கையும் ஒப்பிட்டால் மனிதனே உயர்ந்தவன் என்பது தெரியும்.. ஏனென்றால் மனிதனுக்கு யாவற்றையும் பகுத்துப் பார்க்கும் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு இருக்கிறது.

புத்தித் தரங்கம் என்ற புகை வண்டி
       " இன்ப துன்பத்திற்கு அப்பாற்பட்டது எதுவோ அதுதான் ஆனந்தம். இந்தப் பிறவிப் பிணியைப் போக்கும் ஆண்டவனின் அருளைப் புணையாகக் கொண்டு யார் பக்தித் துறையிழிந்து செல்கிறார்களோ, அவர்கள் ஆனந்த வாரியை நிச்சயம் அடைவார்கள். எங்ஙனம் தண்டவாளத்தின் மேல் தடம் புரளாது செல்லும் இரயில் பல்லாயிரக் கணக்கான மக்களை ஓரிடத்திலிருந்து பல தூரம் தாண்டி இறக்கச் செய்கின்றதோ அது போல புத்தியும் தடம் புரளாது செல்லவேண்டும். புத்தித் தரங்கம் பக்தித்துறை வழியே செல்லும்படி செய்ய வேண்டும். கற்றலை விடக் கேட்டல் சிறந்தது. அதற்குத்தான் இறைவன் ஒருவாய் அமைத்து இரு காதுகளைப் படைத்திருக்கிறாரோ? காதினால் கேட்டவைகளைத் தொகுத்து பின் சிந்தித்து, தெளிவடைய வேண்டும். தெளிவு ஏற்பட்ட பிறகு தோன்றுவது நிஷ்டை.

கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டை, அனுபவம் --- இப் படிகளின் வழியே சென்றால், புத்தித் தரங்கம் தெளிந்து இன்பக் கடலுடன் கலக்கலாம். ஆனால் அறிவு கலங்கியிருக்கிறதே ?இது தெளிந்த பிறகு பக்தி செய்யலாம் என்று இராமல், பூக்களைக் கொய்து குடுமியில் வைத்துக் கொண்டும், அபிஷேகம் செய்ய வாயில் நீரைக் கொணர்ந்தும், நைவேத்தியத்திற்காகத் தான் சுவை பார்த்த மாமிசத்தைக் கொண்டு வந்தும், இறைவனை பக்தித் துறையிழிந்து பூசை செய்த கண்ணப்பர் எவ்வாறு இறைவனாகிய ஆனந்தவாரியோடு சங்கமம் ஆனாரோ அதே போன்று, புத்தித் தரங்கம் தெளியாமல் இருந்தாலும் பக்தித் துறையில் இறங்கினால் ஆனந்தவாரியோடு கலந்து, அத்தருணமே தெளிவு பிறந்துவிடுவதையும் காணலாம்.

       முருகன், சுட்டி என்ற ஆயுதத்தை ஒருமுறை சூரனிடம் விட்டு, குருதி வெள்ளம் பொங்க, மேன்மை அடைந்தான். இந்திரனுக்கு அவனது ஆட்சியையும், அமராவதி என்ற தலைநகரையும் மீட்டுக் கொடுத்த முருகன் நம்மையும் ஆட்கொண்டு, அழுக்குக் கடலிலே கலக்கச் செல்கிற புத்தியை ஆனந்த வாரியில் கலக்க வழி காட்டுவான் என்ற நம்பிக்கையோடு முருகன் செயல்களை நினைவு படுத்தும் திருப்புகழ் போன்ற பாக்களை உணர்ந்து ஓதுவோமாக !

       பத்தித் துறை இழிந்து ஆனந்த
        வாரி  படிவதினால்
       புத்தித் தரங்கம் தெளிவதுஎன்
       றோ? பொங்கு வெங்குருதி
       மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ
        ரனைவிட்ட  சுட்டியிலே
       குத்தித் தரங்கொண்டு அமரா
       வதிகொண்ட கொற்றவனே !


(பொங்கி வெம்மையான இரத்தம் மிகுதியாகக் குதிக்க, வெவ்விய சூரனை, தான் ஏவிய சுட்டியென்னும் படைக் கலத்தால் குத்தி, அதனால் உண்டான சிறப்பை மேற் கொண்டு, அமராவதியைக் கைக் கொண்ட வெற்றி மிடுக்குடைய பெருமானே ! பக்தி என்னும் துறையில் இறங்கி ஆனந்தமென்னும் கடலில் படியும் முறையினால் என்னுடைய புத்தியாகிய சிற்றாற்றிலுள்ள அலைகள் தெளிவது என்றைக்கோ?
Uma Balasubramaniyan
உமா பாலசுப்பிரமணியன்,
சென்னை.
கை பேசி எண் -- 9962608538
மின்னஞ்சல் முகவரி --  uma_kbs@yahoo.com

'பத்தித் திருமுகம்' என்ற  அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரத்தின்  உட்பொருளை அதன் ஆழத்திற்குச் சென்று ஆய்ந்து எழுதியவர் திருமதி உமா பாலசுப்பிரமணியன். அருணகிரிநாதரின் நூல்களில்  மிகுந்த ஆர்வம் கொண்டு பல அருமையான கட்டுரைகள் எழுதி வருகிறார். இவருடைய கட்டுரைகள் பல, தமிழ்ப் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. சிறந்த திருப்புகழ் ஆசிரியர். சென்னையில், ஆர்வமுள்ள பலருக்குத் திருப்புகழ் பயிற்றுவிக்கிறார் . ஆழ்ந்த தமிழ்ப்பற்றும் இறைப்பற்றும் மிக்கவர்.
Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp