Copy
கே.பி. சுந்தராம்பாள்: பகுதி 3
Sri Valli-Teyvanai Samedha Murugan

கே.பி. சுந்தராம்பாள்

முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர்

பகுதி 3

KB Sundarambal 1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தராம்பாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் மருந்து சாப்பிட மறுத்து வந்தார். அவர் மயக்க நிலையில் இருந்தபோது மருந்து செலுத்தப்பட்டது.

செப்டம்பர் 19அன்று அவர் உடல்நிலை மிக மோசம் அடைந்தது. அதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் சுந்தராம்பாளைக் காப்பாற்ற முடியவில்லை. வளர்ப்புமகள் ராமதிலகம், மருமகன் ரத்தினசபாபதி, தம்பி கே.பி.கனகசபாபதி ஆகியோர் அருகே இருந்தனர்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார்.

“கே.பி.எஸ். தேசிய நடிகை. அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும். அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதை சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதன்படி, நடிகர் சங்கத்துக்கு சுந்தராம்பாள் உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பட்வாரி, அமைச்சர்கள், தி.மு.கழக தலைவர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் _ நடிகைகள், பிரமுகர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். அன்று மாலை நடந்த இறுதி ஊர் வலத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. “சிதை”க்கு சுந்தராம்பாளின் தம்பி கே.பி.கனகசபாபதி தீ மூட்டினார்.

குரல்வளத்தாலும், பாடும் திறத்தாலும் நடிப்புத்திறனாலும் ஒரு கலைஞரான கே.பி.சுந்தராம்பாள் சிறுவயதில் பட்ட துன்பங்கள் நிறைய. திருமண வாழ்வில் எதிர்கொண்ட ஏமாற்றங்களும் அதிகம். ஆனாலும் கே.பி.எஸ். கலையின் மேல் கொண்டிருந்த பிடிப்புகளும் அதற்கான சமூக உந்துதல்களும் பெரும் காரணிகளாக முன் நின்றிருக்கின்றன. எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும், ஒரு பெண்ணாக மணவாழ்வில் அவர் எதிர்கொண்ட புறக்கணிப்புகளும் உதாசீனங்களும் நிகழ்கலைகளில் ஈடுபடும் பெண்கலைஞர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிற அவலத்தையே சுட்டி நிற்கின்றன. இது கே.பி.எஸ். காலம் தொட்டு இன்று வரை தொடரும்அவலம்தான்.

KB Sundarambal

கே.பி. சுந்தராம்பாள் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் மட்டுமே அவருடைய அக உலகையும், பெண்மனத்தின் நெகிழ்ச்சியையும் புலப்படுத்தும் ஆதாரமாக உள்ளன. தமிழிசை இயக்கம் தீவிரமாக இருந்த ஒரு காலகட்டத்தில் பாரம்பரிய இசை குறித்தும் கர்நாடக இசை குறித்தும் அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகள் கூடுதல் முக்கியத்துவம் கொண்டவை. இசையில் பிராமணிய மதிப்பீடுகளின் மேலாண்மைக்கும், வட நாட்டு மெல்லிசையை அப்படியே எடுத்தாளும் வர்த்தக சினிமாவின் போக்குக்கும் எதிராக அவர் இயக்கம் கொண்டு அதனாலேயே புறக்கணிக்கப்பட நேர்ந்தது கூடுதலான சமூகப் பரிமாணங்கள் கொண்டது.

சுந்தராம்பாள் நாடக மேடைகளிலும் சினிமாப் படங்களிலும் தனியாகவும் பாடிய 200க்கு மேற்பட்ட பாடல்கள் இசைத் தட்டுகளாக வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்ற பாடலையும் “தனித்திருந்து வாழும் தவமணியே” என்ற பாடலையும் காலத்தால் அழியாவண்ணம் அற்புதமாகப் பாடியுள்ளார், கே.பி.எஸ்.

தேசியவாதியான கே.பி.எஸ். பண்டித நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபோது “பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே” என்ற பாடலையும், கஸ்தூரிபாய் கால மானபோது “உன்னை மறந்திடப்போமா” என்ற பாடலையும், காந்தி மறைந்தபோது “உத்தமராம் காந்தியை” என்ற பாடலையும் தனி இசைத்தட்டாக உள்ளம் உருகப் பாடினார்.

மகாத்மா காந்தியை சுந்தராம்பாள் இரண்டு முறை சந்தித்து இருக்கிறார். 1937ல் காந்தி ஈரோடு வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டின்படி கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டில் உணவருந்தினார். மகாத்மாவுக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பறிமாறினார் கே.பி.எஸ். “எனக்குச் சாப்பாடு மட்டும்தானா? தட்டு கிடையாதா?” என்று காந்தி சிரித்துக்கொண்டே கேட்க, விருந்து முடிந்ததும் தங்கத்தட்டை காந்தியிடம் வழங்கினார் கே.பி.எஸ். காந்தி அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்துவிட்டார்.

1958ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது, கே.பி.எஸ். தமிழக மேல்_சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு “பத்மபூஷன்” விருது வழங்கி கவுரவித்தது. தருமபுரம் ஆதினம் “ஏழிசை வல்லபி” என்ற பட்டத்தையும், தமிழிசைச் சங்கம் “இசைப் பேரறிஞர்” பட்டத்தையும் வழங்கின.

அவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு அதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் இல்லாத ரூ. 1 லட்சம் தந்தார்.

 
Copyright © 2012 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp