Copy
முருக பக்தி கையேடு--பகுதி 1
Sri Valli-Teyvanai Samedha Murugan

முருக பக்தி கையேடு

பகுதி 1

எழுதியவர்: பேட்ரிக் ஹரிகன்

தமிழில் மொழிபெயர்ப்பு: சாந்திப்பிரியா

21 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கும் முருக பக்தி மரபு உலகெங்கும் படர்ந்து கொண்டே வருகிறது. ஆனாலும் தமிழர்களிலும் ஒரு சிறிய பிரிவினர் அதை இன்னமும் புரிந்து கொள்ளவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. ஒரு அமெரிக்க நாட்டை சேர்ந்த முருக பக்தர், முருக பக்தியின் தோற்றம், அதன் வரலாறு, தன்மை, மற்றும் பக்தி வழிபாடு போன்ற அனைத்தையும் 1970 ஆம் ஆண்டு முதல் தான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் ஆராய்ந்து, இந்தக் கட்டுரை மூலம் அவற்றை விவரித்துள்ளார்.

முருக பக்தி அல்லது சுப்ரமண்யா அல்லது ஸ்கந்த குமாரா என்பவர் மீதான முழு ஈடுபாடு அல்லது பக்தி என்பது பண்டைய சங்க காலத்தில் இருந்து இன்றுவரை பலவேறு வகைகளிலும் வெளிப்படுத்தி வரப்படும் ஆன்மீக வழிப் பாதையாகும். 21 ஆம் நூற்றாண்டிலும் தமிழ் மொழி பேசும் மக்களிடையே மட்டும் அல்ல உலகமெங்கும் உள்ள மற்ற மக்களிடையேயும் இந்த மரபு பரவி வருகிறது.

அளவற்ற உலகப் பொருளாசை நிறைந்துள்ள, பண்டைய பழக்க வழக்கங்கள் மீதான வெறுப்பு வளர்ந்து கொண்டு வந்துள்ள தற்போதைய நிலையிலும், முருக பக்தி மரபு மற்றும் வாழ்கை முறையை நடுநிலைமையோடு ஆராய்ந்து, அதை ஆதரிக்க வேண்டியதின் அவசியத்தை எடுத்துக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.

என் கதை

நான் அமெரிக்க ஐரோப்பிய பரம்பரை குடும்பத்தில் பிறந்தவன். நானோ என் உடன் பிறந்தவர்களோ எந்த வித சமய போதனைகளினாலும் அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் அல்ல. அதே சமயம் என்னுடைய பெற்றோர்களோ எங்களை கட்டாயப்படுத்தாமல், எங்கள் மனதுக்கு ஏற்ற சமய நெறியினை ஏற்றுக் கொள்ள எங்களை ஊக்குவித்தார்.

அதுவே 1970 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அன்று சிலோன் என அழைக்கப்பட்ட இன்றைய ஸ்ரீலங்காவிற்குச் சென்று புத்த மதத் துறவியாகும் எண்ணத்தை என்னுள் தோற்றுவித்தது. ஆனால் நான் சிலோனுக்கு சென்று அங்கு மேற்கொள்ள நினைத்திருந்த ஆன்மீக வழி

Patrick Harrigan as a Buddhist upasaka in Ceylon, 1971
பேட்ரிக் ஹரிகன், 1971
எதிர்பாராத விதமாக திசை மாறி சென்றது. அந்த நேரத்தில் உள்ளூரை சேர்ந்த வேத்தா இனப் பிரிவினர், இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் புத்த மதத்தினர் என அனைவருமே பெரிதும் புனிதமாக போற்றி வந்திருந்த கதிர்காமா அல்லது கதிர்காமன் எனப்பட்ட காட்டில் இருந்த ஆலயத்தைக் கேள்விப்பட்ட எனக்கு, அங்கு சென்று அப்படிப்பட்ட மகத்துவமான இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

 

அது என் வாழ்க்கையில் பெரும் திசை மாற்றத்தை கொண்டு வந்தது. புத்த மதத்தை தழுவி இருந்த என்னுடைய அமெரிக்க நண்பருடன் அங்கு சென்று அங்கிருந்த யோகாச்ஸ்ரமத்தில் தங்கினேன். அங்கிருந்த மாணிக்க கங்கை நதியில் குளித்தப் பின் பழங்கள், மலர்கள் மற்றும் ஊதுபத்திகள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஆரவாரமற்ற, எளிமையாக காட்சி அளித்த கதிர்காம ஸ்கந்தனின் ஆலயத்திற்குச் சென்றேன்.

கதிர்காமாவில் சென்று வணங்கினால் நம்முடைய வேண்டுகோட்கள் நிறைவேறும் என்ற பரவலான நம்பிக்கை அனைவரிடமும் இருந்தது. ஆகவே அங்கு வந்த பக்தர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வேண்டுகோளுடன் அங்கு வந்தார்கள். பரீட்சையில் தேற வேண்டும் என்று மாணவர்களும், தமது நோய்கள் தீர வேண்டும் என்று நோயால் பீடிக்கப்பட்டவர்களும், மற்றும் வெளிநாடுகளில் வேலைக் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும் பலதரப்பட்ட பக்தர்கள் அங்கு வந்து கொண்டு இருந்தார்கள். அப்படிப்பட்ட கோரிக்கைகளுடன் தமது சக்திக்கு ஏற்ப காணிக்கைகளை அந்த ஆலயத்திற்கு கொண்டு வந்து கொண்டிருந்தவர்களைக் பார்த்த நானும், அங்கு சென்று என்னுடைய கோரிக்கையை வைக்க முடிவு செய்தேன்.

அந்த நாட்டில் எனக்கு ஏதாவது ஒரு வேலைக் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை கதிர்காமரிடம் வைக்க முடிவு செய்தேன். என்ன செய்ய வேண்டும் என புரியாமல் இருந்த நான் மற்ற அனைவரும் என்னென்ன சடங்குகளைப் (வழிபாடு) செய்து வழிபட்டார்களோ அதே முறையில், அவர்களைப் பின்பற்றி நானும் அவை அனைத்தையும் செய்தேன்.

என்னுடைய அமெரிக்க நண்பர் சிலோனில் வெகுகாலமாக தங்கி இருந்த ஒரு ஐரோப்பிய துறவியைப் பற்றிக் கூறிய பின், அவரை தான் மீண்டும் சந்திக்கப் போக உள்ளாதாக என்னிடம் கூறினார். அதைக் கேட்ட நானும் ஜாப்னா பிராந்தியத்தில் இருந்த அந்த ஜெர்மன் ஸ்வாமியை சந்திக்க ஆவல் கொண்டேன். அது என்னுடைய வாழ்க்கையில் இன்னொரு திருப்பு முனையாக அமைந்தது. அவரை சந்தித்தப் பின் அந்த ஜெர்மன் ஸ்வாமியான கெளரிபால என்பவர் எனக்கு ஆன்மீக ஆசானாக மாறினார்.

ஜெர்மன் ஸ்வாமி கெளரிபால
ஜெர்மன் ஸ்வாமி கெளரிபால

ஜெர்மன் ஸ்வாமி கெளரிபால தற்கால ஸ்வாமிகளைப் போல தன்னை சுற்றி எப்போதும் சீடர்கள் கூட்டம் நிறைந்து வேண்டும் என்று நினைத்தது இல்லை. கடந்த 35 வருடங்களாக ஒரு ஆண்டித் துறவியைப் போல சிலோன் முதல் ஹிமய மலை வரை இருந்து கொண்டு இருந்தவருக்கு ஆதரவு கொடுத்து, அவருக்கு நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக இருந்துள்ளவர் புகழ் பெற்ற நல்லூர் யோக ஸ்வாமி அவர்கள். ஸ்வாமி கெளரிபால மற்றும் பல சீடர்களின் மீது நல்லூர் யோக ஸ்வாமியின் முத்திரைகள் ஆழமாகவே பதிந்து இருந்தது.

ஜெர்மன் ஸ்வாமி முதலில் தன்னிடம் சீடர்களாக வந்து சேர நினைப்பவர்களை விரட்டி அடித்தும், திகில் கொள்ள வைத்தும் மற்றும் பிற அவமதிப்பும் செய்வது போல பாவ்லா காட்டிய விதத்தினால் அவரிடம் சென்றவர்கள் சில நாட்கள், சில வாரங்கள் அல்லது சில மணி நேரமே அவரிடம் சீடர்களாக இருந்துள்ளார்கள். அப்படிப்பட்ட சில அனுபவங்களை எனக்கும் அவர் கொடுத்தாலும், அங்கிருந்து நகராத என்னை அவருடைய ஆஸ்ரமமான சும்மஸ்தான் என்பதில் தங்கிக் கொள்ள அனுமதித்தார். என்னை மீண்டும் மீண்டும் எத்தனைதான் அவர் விரட்டி அடித்தாலும், 1984 ஆம் ஆண்டில் காலமான அவரிடம் பல அனுபவங்களைப் பெற நான் மீண்டும் மீண்டும் அவரிடமே சென்று கொண்டு இருந்தேன்.

பண்டையக் கால நடைமுறையில் இருந்தவாறு, அவருடைய ஆஸ்ரமத்தை பராமாரித்துக் கொண்டும், அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டு இருந்தவாறும், அவர் தினமும் நடந்து செல்கையில் அவரை பின் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தவாறும் என்னுடைய ஆசானான அவருக்கு சேவை புரிந்து வந்தேன். தமக்கென எல்லைகளை வகுத்துக் கொண்டு, விருப்பு வெறுப்புக்களை வளர்த்துக் கொண்டு, தாம் என்ற மமதையுடன் இருந்த சீடர்களின் மமதையை ஒரு சுத்தியலால் அடித்து உடைத்து எறிவது போன்ற கடுமையான நிலையைக் கொண்ட பண்டைய கால குரு சிஷ்ய வாழ்கை முறையை என்னை அறியாமலேயே நானும் மேற்கொண்டு இருந்தேன். விளைவு, பக்தி அல்லது கடவுள் சேவை என்ற மெய்பொருளை என்னால் நன்கு கிரகித்துக் கொள்ள முடிந்தது.

தன்னுடைய ஆசானான யோக ஸ்வாமியைப் போலவே ஜெர்மன் ஸ்வாமியும், 1940 ஆம் ஆண்டு முதல் 25 வருட காலத்தில், ஒவ்வரு வருடமும், தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மட்டும் ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு, ஜாப்னாவில் இருந்து கதிர்காமன் வரை காலணி கூட இல்லாமல் பாத யாத்திரையை மேற்கொண்டு இருந்த நிலையில், 1970 ஆம் ஆண்டு நானும் அவருடன் அந்த பாத யாத்திரையில் சேர்ந்து கொண்டேன். முதலில் அவருடைய ஆஸ்ரமம் கதிர்காமனில் இருந்தது. அதன் பின்னரே அவர் தன்னுடைய ஆஸ்ரமத்தை ஜாப்னா பிராந்தியத்தில் இருந்த செல்வ சன்னிதி ஆனந்த முருகனின் ஆலயத்தின் அருகில் அமைத்தார். அங்கு வந்து கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான ஏழை பக்தர்களுக்கு வருடம் முழுவதும், தினமும் அன்னதானம் அளிக்க ஏற்பாடு செய்து இருந்தார்.

Subscribe to Murugan Bhakti newsletter
 
Copyright © 2012 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp