Copy
செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடர்--பகுதி 2
செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடர்

சித்ரா மூர்த்தி

பகுதி 2

முருகன் ஒரு தச்சன்
மற்றொரு பாடலில் எங்கள் முருகன் இருக்கிறானே அவன் உலகிலேயே மிகப் பெரிய தச்சன் என்கிறார். ஏன் தெரியுமா? கடலில் மாமரமாய் நின்று கொண்டிருந்த சூரனை வேலாற் பிளந்து, மயிலும் சேவலுமாகச் செய்து உயிரூட்டி தன் அருகிலேயே வைத்துக் கொண்டிருக்கிறானாம். "தச்சா! மயில் சேவலாக்கிப் பிளந்த சித்தா! என்று பாடுகிறார்.

முருகப்ப ஆசாரி என்று ஒரு கட்டுரையே எழுதியுள்ளார் டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை அவர்கள். அழியாவரம் பெற்றிருந்த சூரனின் உடலை ஒரு வேலாற் பிளந்து என்றும் மக்கிப் போகாத அவனை இரு கூறாக்கி மயிலும் சேவலுமாகச் செய்த முருகன்தான் மிகப் பெரிய தச்சன் என்ற பொருள்பட அருணகிரியார், அச்சாய் இறுக்காணி என்ற தச்சூர்ப் பாடலில் 'தச்சா! மயில் சேவலாக்கிப் பிளந்த சித்தா!' என்கிறார்.

சித்த மூர்த்திகளே இந்த அற்புதச் செயலை செய்ய முடியுமாதலில் 'சித்தா' என்று முருகனை விளிக்கிறார். பகைவரை எதிர்த்துக் கொல்லுதல் மனிதர் இயல்பு. இங்கு பகைவனை மயிலாகவும் சேவலுமாக மாற்றித் தன் அருகிலேயே நிரந்தரமாக வைத்துக் கொண்டது, அவன் வீரத்தோடு கருணையையும் காட்டுகிறது எனவே நாத தத்துவமான சேவல், 'கொக்கு அறு கோ' என்று கூவிக் காலையில் நம்மை எழுப்பி அஞ்ஞான இருளை விரட்டுங்கள், ஞான சூரியனான நம் முருகன் வந்துவிட்டான் என்று கூறுவதால், முருகன் கையிலேயே இடம் பிடித்துவிட்டது.அடுத்ததாக பார்க்கப் போவது 'காலனிடத்தணுகாதே' எனத் துவங்கும் பாடல்.

காலனிடத்து அணுகாதே

காலனிடத்...தணுகாதே
காசினியிற்...பிறவாதே
சீலஅகத்...தியஞான
தேனமுதைத்...தருவாயே
மாலயனுக்...கரியானே
மாதவரைப்...பிரியானே
நாலுமறைப்...பொருளானே
நாககிரிப்...பெருமாளே.


நான் எமனுடைய ஊரை அணுகாதிருக்க வேண்டும்
இப்பூமியில் பிறவாதிருக்க வேண்டும்

அன்று அகஸ்திய முனிவருக்கு அளித்த உபதேசத்தை எனக்கும் தருவாயாக என்றெல்லாம் கூறுகிறார்.அகஸ்திய முனிவர் தென்னாட்டிற்கு வந்தபோது தணிகேசனிடம் ஞானோபதேசம் பெற்றார். பழனி முருகனிடம் தமிழின் விரிவிலக்கணத்தைக் கற்றார். எனவேதான்.

'சிவனை நிகர் பொதியவரை முநிவன் அக மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே! என்று பாடுகிறார் அருணை முநிவர்.
 
"வேல் இறைவன் இயம்பிய ஞான முற்றுணர்ந்து வாழ்ந்திருந்தான் முநிவன்"- தணிகைப் புராணம். இதைத்தான் 'சீல அகத்திய ஞானத் தேன் அமுது' என்கிறார். சேந்தனை, கந்தனை, செங்கோட்டு வெற்பனை, செஞ்சுடர்வேல் வேந்தனை, செந்தமிழ் நூல் விரித்தோனை என்று அலங்காரத்தில் பாடுகிறாரே அதன் பொருளும் இதுதான்.

அந்தகா வந்து பார்!
அடுத்ததாக நாம் எடுத்துக் கொள்வது 'கொடிய மறலியும்' எனத் துவங்கும் பாடல். புலவர் சே.த. ராமலிங்கம் பிள்ளையவர்கள், வன்தொண்டர் என்று ஒரு அடியார் வர்க்கத்தினரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இறைவனிடத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அவர்கள். மலைபோல் சோதனை வந்தாலும் சரி, இறை நம்பிக்கையை அவர்கள் கைவிட மாட்டார்கள். அப்படிப்பட்ட வன்தொண்டர் அருணகிரிநாதர் அவர்கள்.

'செந்தில் வேலவனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர் வடிவாள் கண்டாயடா அந்தகா, வந்துபார் சற்று என் கைக்கெட்டவே' என்று எமனுக்கே அறைகூவல் விடுக்கிறார். 'கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய - எமனை ஏன் கொடியவன் என்கிறார்.

அவன் ஈவு இரக்கமற்றவன்- ஆதிவிதியோடு பிறழாத வகை தேடி எனது ஆவி தனையே குறுகி வருபவன் அவன்! எமனும் அவனது கடகம்- சக்ர வ்யூகம் வகுத்தாற்போல் வரும் அவனது சேனை.. இவர்கள் மடியும்படி குழந்தையான நான் உனது திருவருளைத் துணையாகக் கொண்டு போரிடுவேன். அதைக் காண நீ எப்படியெல்லாம் வரவேண்டும் என்று அன்புக் கட்டளை இடுகிறார்.

 கொடிய மறலியு மவனது கடகமு
 மடிய வொருதின மிருபதம் வழிபடு
 
 குதலை யடியவ னினதருள் கொடுபொரு...மமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
 
 மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
 கொடியு மகிலமும் வெளிபட இருதிசை...யிருநாலும்
 
படியு நெடியன எழுபுண ரியுமுது
 திகிரி திகிரியும் வருகென வருதகு
 
 பவுரி வருமொரு மரகத துரகத...மிசையேறிப்
பழய அடியவ ருடனிமை யவர்கண
 
 மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
 பரவ வருமதி லருணையி லொருவிசை...வரவேணும்
 
சடில தரவிட தரபணி தரதர
 பரசு தரசசி தரசுசி தரவித
 
 தமரு கமிருக தரவனி தரசிர...தரபாரத்
தரணி தரதநு தரவெகு முககுல
 
 தடினி தரசிவ சுதகுண தரபணி
 சயில விதரண தருபுர சசிதரு...மயில்வாழ்வே
 
நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
 எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
 
 நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ...நெடுவானும்
நிலனும் வெருவர வருநிசி சரர்தள
 
 நிகில சகலமு மடியவொர் படைதொடு
 நிருப குருபர சுரபதி பரவிய...பெருமாளே.


கொடிய மறலியுடன் நான் போரிடுவதைக் காண நீ எப்படி வரவேண்டும் தெரியுமா? குறவர் மகள் புணர் புயகிரி சமுகம், அறுமுகம், வெகுநயனம், ரவி உமிழ் கொடி இவற்றுடன் வரவேண்டும்; மயிலில் ஏறி வர வேண்டும்- எப்படிப்பட்ட மயில்? இருதிசை இருநாலும், படி, எழுபுணரி, முதுதிகிரி இவையெல்லாம் க்ஷண நேரத்தில் சுற்றி வரும் மயிலில் ஏறி வரவேண்டும்.

கூட யாரெல்லாம் வரவேண்டும்- பழைய அடியவர்கள் தமிழில் துதி பாடிவர, இமையவர் கணம் வேதங்கள் சொல்லி இருபுறமும் வரவேண்டுமாம். இங்கு அதலசேடனார் பாடல் நினைவுக்கு வரும். யாரையெல்லாம் கூட்டிக்கொண்டு அருணையில் வரவேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டபோது முருகன் அதன்படியே கம்பத்து இளையனாராகத் தோன்றி மறைந்தானே! முருகா அதேபோல் இங்கும் நான் மறலியுடன் இடும் போரைக் காண நீ வரவேண்டும் என்கிறார்!

அடுத்ததாக நாம் பார்க்கப்போகும் பாடல் 'பத்தர் கணப்ரிய' எனத் துவங்கும் பாடல். ஆரம்பமே வெகு அழகு பத்தர் கணப்ரிய- பத்தர்களுக்குப். பிரியமானவனே அல்லது பத்தர் கணங்களை விரும்புபவனே என்றும் பொருள் கொள்ளலாம். நிருத்த நடித்திடு பட்சி நடத்திய குகா! என்று மயிலுக்கும் ஒரு குறிப்பு கொடுத்தபின் அவர் பாடும் வரிகளை நாம் தினமுமே முருகனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்-"பூர்வ பச்சிம தக்ஷிண உத்தர திக்குள பக்தர்கள் அற்புதம் என ஓதும் சத்த மிகுத்த திருப்புகழைச் சிறிது அடியேனும் செப்பென வைத்து உலகில் பரவ தெரிசித்த அனுக்ரஹம் மறவேனே!"

இப்பாடலில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். 'சிறிது அடியேனும் செப்பு என வைத்து' என்கிறார். மற்றொன்று 'மறவேனே' எனக் கூறுவது. 16,000 பாடல்கள் பாடிய அவரே தான் பாடியது சிறிதளவு என்றால் நாம் பாடியது எம்மாத்திரம்? மறவேனே என்கிறார், அவரா முருகனை மறக்கக் கூடியவர் இதெல்லாம் நமக்காகக் கூறப்பட்டது அல்லவா!

கம்பன் கூறுகிறான்- "பாற்கடலிலுள்ள பால் முழுவதையும் நக்கியே குடித்துவிடுவேன் என்று "கூறும் பூனையைப்போல் அடியேன் ராமாயணத்தை எழுத முற்பட்டேன் என்று. கந்தர் அந்தாதி செய்யுள் ஒன்றில் "குமரக் கடவுளை நான் பாட நாடுதல் கையால் நீந்தியே கடலைக் கடப்பேன் என்று கூறுவார் புத்திக்கும், சந்திரனைப் பிடிக்க வானில் கை நீட்டும் சிறுவரின் புத்திக்கும் ஒப்பாகும்" என்கிறார் அருணகிரியார்.

"அளக்கர் அக்கரை காண்பான் கைநீத்திசைவார் பனிக்கதிர் அளக் கரக்கரை வான் நீட்டு மைந்தர் புந்திக்கு ஒக்குமே" நிறைகுடம் தளும்பாது!
 
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
 பட்சிந டத்திய...குகபூர்வ
 
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
 பத்தர்க ளற்புத...மெனவோதுஞ்
 
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
 ருப்புக ழைச்சிறி...தடியேனுஞ்
 
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
 சித்தவ நுக்ரக...மறவேனே
 
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
 கற்கவ ணிட்டெறி...தினைகாவல்
 
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
 கட்டிய ணைத்தப...னிருதோளா
 
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
 கப்பனு மெச்சிட...மறைநூலின்
 
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
 சர்ப்பகி ரிச்சுரர்...பெருமாளே.


தத்துவ தற்பரம் முற்றும் உணர்த்திய பெருமாள் என்று செங்கோடனை மட்டுமே குறிப்பிடுகிறார். தத்துவம்- உண்மைப்பொருள், தற்பரம்- பரம்பொருள். அர்த்தநாரீஸ்வர க்ஷேத்ரம் என்பதால் 'சக்தியை ஒக்க இடத்தினில் வைத்த தகப்பன்' என்ற பாடல் வரிகள் மிகவும் ரசிக்கத் தக்கவை!

 நமக்குப் பாடமாக உள்ள மற்றொரு பாடல் 'புற்புதமெனாம' எனத் துவங்கும் பாடல். புற்புதம்- நீர்க்குமிழி என்று பொருள் (bubble). அலங்காரத்தில் வருமே நீர்க்குமிழிக்கு நிகரென்பது யாக்கை என்று! மனையாளும், புத்திரரும்,வீடும், மித்திரரும் கூடி நிற்கும் இந்த வாழ்க்கை புற்புதம் போன்றது என்பதை மறந்த புத்தி, இந்த பெரு வாழ்வைக் கழித்து சலிப்பதேயில்லை.

'நிற்பதொரு கோடி கற்பமென மாய நிஷ்டையுடன் வாழும் அடியேன் நான்'- கற்பம் என்றால் பிரமனது ஒரு நாள். 432 கோடி வருடம் கொண்டது. நிலைத்து நிற்பது ஒரு கோடி கற்பம் என நான் நினைத்துக் கொள்கிறேன். அதாவது 432கோடி x ஒரு கோடி= 432 அருகில் 14 பூஜ்யங்களைப் போடவேண்டும்.

அப்படியொரு அசட்டுத் தனமான மயக்கத்தில் உள்ள நான் உன் மேல் வைத்த காதல் நிலைத்து நிற்கும் வழியை எனக்கு உபதேசித்தருள்வாயாக என்று கூறுகிறார். முத்தமிழ் வினோத என்கிறார் இங்கு.நாலு கவி த்யாகா என்றார் அங்கு. மலை மேல் இருக்கும் கேசவபெருமாளை எண்ணி 'சக்ரகதைபாணி மருகோனே' என்கிறார்.
 
புற்புதமெ னாம அற்பநிலை யாத
 பொய்க்குடில்கு லாவு...மனையாளும்
 
புத்திரரும் வீடு மித்திரரு மான
 புத்திசலி யாத...பெருவாழ்வு
 
நிற்பதொரு கோடி கற்பமென மாய
 நிட்டையுடன் வாழு...மடியேன்யான்
 
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
 நிற்கும்வகை யோத...நினைவாயே
 
சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
 சக்ரகதை பாணி...மருகோனே
 
தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
 வைத்தவொரு காழி...மறையோனே
 
கற்புவழு வாது வெற்படியின் மேவு
 கற்றைமற வாணர்...கொடிகோவே
 
கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
 கற்பதரு நாடர்...பெருமாளே.


செங்கோட்டுத் திருப்புகழில் ராமாயணம்
Rishis perform yagamஇவ்வாறு நமக்குக் கிடைத்த 21 செங்கோட்டுப் பாடல்களும் படித்துப் பார்ப்போமேயானால் எத்தனை எத்தனை கருத்துக்கள் நமக்குக் கிடைக்கும். மலையில் ஹனுமானைத் தரிசித்ததனாலேயோ என்னவோ, ஒரு செங்கோட்டுப் பாடலில் ராமாயண சாரத்தையே 9 வரிகளில் பாடி வைத்துள்ளார்.

"மேலை வானொர் உரைத் தசரற்கொரு
பாலனாகி உதித்து, ஓர் முனிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ கற்கு உரு அடியாலே
மேவியே, மிதிலைச் செற்று மின் மாது
தோள் கழுவிப் பதி புக்கிட, வேறு தாய் அடவிக்குள் விடுத்தபின் அவனோடே
ஞால மாதொடு புக்க வனத்தில் வாழ்வாலி பட கணை தொட்டவன்,
நாடி ராவணனைச் செகுவித்தவன்"


இவ்வாறு செல்கிறது அப்பாடல். ஞானசம்பந்தர் அங்கு வந்திருந்தபோது, திருப்பதிகம் பாடி மக்களின் குளிர் சுரம் தீர்த்த வரலாறு நினைவுக்கு வரவே 'தர்க்க சமண் மூகர் மிக்க கழுவேற வைத்த ஒரு காழி மறையோனே' என்று சம்பந்தப் பெருமானை வணங்குகிறார். வேறொரு பாடலில் பாலைக் கற்பகமே என்ற சொற்றொடர் வருகிறது.

பாலைவனத்தில் ஒரு கற்பக விருக்ஷம் தோன்றினால் எப்படி இருக்குமோ அதைப் போன்று செங்கோடைக் குமரன் காய்ந்து வற்றிப் போன நம் வாழ்க்கையைப் பசுமையாக்கித் தருவான் என்பது பொருள்.இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

விழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்
கந்தர் அலங்காரத்தை எடுத்துக் கொண்டோமேயனால் மொத்தம் 8 செய்யுட்களில் செங்கோடு பற்றிய குறிப்பு வருகிறது. இவற்றுள் நம்மை மிகவும் கவர்ந்த ஒன்று விழிக்குத் துணை எனத் துவங்கும் செய்யுள்.எப்படிப் படித்தாலும் மனதிற்கு அமைதி தரக்கூடியது. இப்படியும் படித்துப் பாருங்களேன்.

விழிக்குத் துணை செங்கோடன் பாதங்கள், மொழிக்குத் துணை அவன் நாமங்கள், பழிக்குத் துணை அவன் பன்னிரு தோள்கள், வழிக்குத் துணை அவன் வடிவேலும் மயூரமும் என்று! முருகா எனும் நாமங்கள் என்கிறார். ஏன் பல பொருட்களைத் தருவது அவன் பெயர், பல நாமங்களைக் கூறுவதன் பயன் தருவது அவனது ஒரு நாமம், அ, உ, ம எனப் ப்ரணவத்தையே உள்ளடக்கியது அவன் நாமம் என்று பல காரணங்கள் கூறலாம்.

மற்றொரு அழகான செய்யுள் 'சுழித்தோடும் ஆற்றில் பெருக்கானது செல்வம்'- இதில் மனத்தைச் சாடுகிறார்- கரிக்கோட்டு முத்தைக் கொழித்தோடும் காவிரிச் செங்கோடன் என்கிலை, குன்றம் எட்டும் கிழித்தோடும் வேல் என்கிலை- மனமே உனக்கு முத்தி எப்படிக் கிட்டும்? காவிரி கடல் எனும் நாயகனையே குறியாகக் கொண்டு ஓடுகிறது; வேல் சூரபத்மனையே குறிவைத்து வேகமாகச் செல்கிறது.

நாமும் நமது வாழ்க்கை எனும் ஆற்றில், காட்டாறு போல் திடீரென்று தோன்றி மறையும் செல்வத்தை நிலையானது என்று கருதாமல், துன்பம்-இன்பம் என்ற இரு கரைகளிலும் மோதாமல் முருகன் எனும் பெருங்கடலை நோக்கிச் செல்வோமேயானால் முத்தி கிட்டுவது நிச்சயம் என்ற பொருள்படப் பாடியுள்ளார்.

கந்தர் அந்தாதியில் செங்கோடு
 இவை தவிர கந்தர் அந்தாதிச் செய்யுட்களிலும் செங்கோடு பற்றிய குறிப்பு வருகிறது. 'தெய்விக மிக்க வேதங்கள் பூசித்த செங்கோட்டு வெற்பு' [ஆரணதந்திகிரி] 'நம் தினத்துனி களை செங்கோட்டினன் என்றும் கூறுகிறார். இவற்றுள் ஒரே ஒரு கந்தர் அந்தாதிச் செய்யுளைப் பார்ப்போம்; ஏனென்றால் முருகன் துதியைக் கேட்பதினாலாயே நாம் அடையக் கூடிய பெரும் பேற்றைப் பற்றி இப்பாடலில் பாடியுள்ளார்.

கந்தர் அந்தாதி 26
 செவிக்கு உன் தவாரண நல்கு இசை பூட்ட வன் சிந்தை அம்பு
 செ வி குன்ற வாரணம். அஞ்சல் என்று ஆண்டது; நீண்ட கன்ம
 செ இக்குன்று அவா ரண வேலாயுதம் செற்றது; உற்றன, கட்
 செவி குன்ற! வாரண வள்ளி பொற்றாள் மற்றென் தேடுவதே


பொருள்
நாகாசல (கட்செவி குன்று) கந்தக் கடவுளே! உன் திருப்புகழை அடியேன் கேட்ட மாத்திரத்தில் உன் கோழிக்கொடி என் ஆன்மாவை ஆட்கொண்டது; உன் வேற்படை பிறவிக்கிடமான என் பேராசையை ஒழித்துவிட்டது. உன் இரு தேவியரின் திருவடியும் என் தலைமேல் வீற்றிருந்தன. இனி நான் தேடுவது என்ன உள்ளது? (வேறு ஒன்றுமில்லை)
(To be continued in Part 3 of 3 Parts)
Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp