Copy
கே.பி. சுந்தராம்பாள்: பகுதி 2
Sri Valli-Teyvanai Samedha Murugan

கே.பி. சுந்தராம்பாள்

முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர்

பகுதி 2

1933−ல் டிசம்பர் 2-ல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து நாடகங்களை நடத்தி வந்தார். பெரும்பாலும் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.

KB Sundarambal as Lord Murugan
கே.பி. சுந்தராம்பாள்

காங்கிரஸ் பிரசாரங்களில் கேபிஎஸ் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். அப்படத்தில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935-ல் இப்படம் வெளிவந்தது.

இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் இப்போது இல்லை. அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.

தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. ‘பொறுமை யென்னும் நகையணிந்து’ , ‘கன்னித் தமிழ்நாட்டிலே – வெண்ணிலவே’ போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30. 1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.

மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை] (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.

1980 செப்டம்பர் 19-ல் கேபிஎஸ் மறைந்தார். கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். அந்நியர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.

நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர். சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார்.
KB Sundarambal
1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். ‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அன்றைய காலகட்டத்தில் (1953) 30 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்த ‘அவ்வையார்’ படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டியவர் கே.பி.சுந்தராம்பாள். ‘அவ்வையார்’ ஒரு அற்புத காவியமாக அமைந்தது. கே.பி.எஸ்ஸின் பாடல்களும் நடிப்பும் ரசிகர் இதயங்களைத் தொட்டன. கறுப்பு_ வெள்ளையில் தயாரான மிகச்சிறந்த படங்களில் அவ்வையாருக்கு நிச்சய இடம் உண்டு. கலைஞர் கருணாநிதி தயாரித்த ‘பூம்புகார்’ (1964) படத்தில் கவுந்தியடிகளாகவும், ஏ.பி.நாகராஜன் தயாரித்த ‘திருவிளையாடல்’ (1965) படத்தில் மீண்டும் அவ்வையாராகவும் கே.பி.எஸ். நடித்தார்.

திருவிளையாடலின் மாபெரும் வெற்றிக்கு கே.பி.எஸ். பாடிய பாடல்கள் பெரிய பலமாக இருந்தன. மகாகவி காளிதாஸ் (1966), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), சின்னப்ப தேவரின் துணைவன் (1969), காரைக்கால் அம்மையார் (1973), திருமலைத்தெய்வம் (1973) ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார்.

டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர். ராமண்ணா தயாரித்த ‘சக்திலீலை’ படத்தில் நடித்தார். கே.பி.எஸ்ஸின் கடைசி படம் இதுதான்.

(to be concluded in Part 3)
 
Copyright © 2012 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp