Copy

குமாரஸ்தவம் 4-5-6 நாமங்களின் விளக்கவுரை

View this email in your browser
Facebook
Facebook
Email
Email
Murugan.org
Murugan.org
Palani.org
Palani.org
Tirichendur.org
Tirichendur.org
Kataragama.org
Kataragama.org

குமாரஸ்தவம்

4-5-6 நாமங்களின் விளக்கவுரை

Lord Karttikeya or Murugan

குமாரஸ்தவம் விளக்கவுரை்

குமாரஸ்தவம் [4-5-6 நாமங்களின் விளக்கவுரை]

தொகுத்து அளித்தவர்
திருப்புகழ் அடிமை அமரர் திரு நடராஜன்

                                                             
[4] ஷட்க்ரீட பதயே நமோநம:
ஷட்க்ரீட = ஆறு திருமுடிகளை உடைய
பதயே   = தலைவனுக்கு
நமோ நம: = போற்றி போற்றி
 
க்ரீடத்தின் சிறப்பு    
உடலில் சிறந்த உறுப்பு தலை. தலைக்கு அணியும் அணிவகையில் உயர்ந்தது முடி எனும் க்ரீடம். இதனை அரசரும் தேவரும் அணிவது மரபு. இந்த அணியைப் புனைவது அரச பதவியை ஏற்றதற்கு அடையாளம். அதனால் இச்சடங்கை முடிசூட்டு விழா எனவும் கூறுவர். இவ்வாறு முடி ஏற்ற மன்னர்களை முடிவேந்தர், மாமுடி மன்னர், தனி முடிக் கவித்தாளும் அரசு என்றெல்லாம் போற்றுவர். தமிழக வேந்தரை 'முடியுடை மூவேந்தர்' என்றும், சேர சோழ பாண்டிய மன்னர்க்குரிய நாடுகளை ஆண்டதால் ராஜராஜர் 'மும்முடிச் சோழர்' எனப் பெயர் பூண்டதும் 'மலையமான் திருமுடிக்காரி' என்றே ஒரு கொடை வள்ளல் இருந்தமையும் பிறவும், முடி அரசரணிவது என்பதை விள்க்குவதாம். ஆங்கில அரசரோ அரசியாரோ வெளியில் வரும்போது வேறு வகையான தலை அணி அணிந்தாலும் அரியாதனத்தில் இருக்கும்போது மணிமுடி பூண்டே விளங்க வேண்டும் என்ற மரபும் வலியுறுத்தும்.

தேவர்களும் மகுடம் அணிவார்கள். அவர்கள் சிவபிரான் திருமுன் வணங்கும் போது வரிசைப்பட நிற்கும் வண்ணம் திரு நந்தி தேவர் தமது பொற்பிரம்பால் தாக்குவதும், அதனால் உதிர்ந்த மணிமுடிகளே அடியார் அலகிடும் குப்பையாய் அமைவதுமாம்.

"வந்து இறை அடியில் தாழும் வானவ்ர் மகுட கோடி பத்தியின் மணிகள் சிந்த, வேத்திரப் படையால் (பிரம்பு) தாக்கி அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும் நந்தியம்பெருமான் பாத நகை மலர் முடி மேல் வைப்போம்"
என்ற பரஞ்சோதி முனிவர் திருவாக்கையும் உன்னுக.
 
முருகனும் மணிமுடியும்
எனவே மண்ணரசாளும் மன்னவரும் விண்ணவரான தேவர்களும் முடி சூடுவர் என அறிந்தோம். இனி முருகபிரானும் திருமுடி சூடி இருத்தலின், அவன் மன்னாதி மன்னனும் தேவாதி தேவனும் ஆவன் என்பதறிக.

 "மால் அயன் சுரர் கோனும் உம்பர்   எலாரும் வந்தனமே புரிந்திடு வானவர் சுடர் வேலவன் எனும்படி மத்தகமிசை முடி தரித்தவா!"
[திருமால் பிரமன், தேவர் தலைவனான இந்திரனும் தேவர் எல்லாரும் வணங்கி வழிபடும் தேவன் ஒளிவேல் இறைவனே என்னுமாறு காட்டி திருத்தலையில் திருமுடி அணிந்தவனே!]

'தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே'
'தேவச் சொர்க்கச் சக்கிரவர்த்திப் பெருமாளே'
குமரப் பரமன் தேவலோகமான சொர்க்கச் சக்ரவர்த்தி ஆதலின் முடி புனைந்துள்ளான் என்பதாம்.
 
செவ்வேள் முடி புனைந்த திறம்
பாவ நிறத்தின் தாருக வர்க்கம் எனப்படும் சூராதியர்களை சம்ஹரிக்க என்று தேவர்கள் செவ்வேளை வேண்டினர். அப்பெருமானையே தேவசேனாபதி என முடி சூட்டிப் பட்டம் கட்டினர். இம்முடி சூட்டிய செய்தி, தென்மொழி ஸ்காந்தத்திலும் பாம்பனடிகள் அருளிய ஸ்ரீமத் குமாரஸ்வாமியத்தில், பட்டாபிஷேகத் திருவிளையாடலிலும் விளக்கமாகப் பேசப்பட்டுள்ளன. அது முதற்கொண்டு ந்ம் குகவேளுக்கு தேவ மோலி தேவக்ரீடி என்ற திருநாமங்கள் வழங்கலாயின.

 "ஆறு முடிக் குமரன் ஆனான் அருட்கயிலை
  ஆறு முடிக்கும் அரன்"

இதுவரையில் கங்கையாறு முடித்த கயிலைக்கு அண்ணல், குமாரன் ஆனபோது ஆறு அணிந்த அண்ணலாய் விட்டான்.
 
குமரன் முடியின் சிறப்பு
முருகபிரான் திருவடியின் விசேஷம் என்ன? மற்றையோர் அணியும் முடிகளில் முத்து, பவளம், ரத்னம் முதலிய நவமணிகளே விளங்கும். எமது இலை வேல் இறைவன் மணிமுடியிலும் நவமணிகள் விளங்கின. ஆனால் அந்நவமணிகள் என்பன நவ வியாகரணங்களே ஆகும்.
 
(1) பாணினீயம்                                        (7) பௌஷ்கரம்
(2) மஹாவியாகரணம்                          (8) சாரஸ்வதம்
(3) ஐந்திரம்                                                (9) கௌமாரம்
(4) சந்திரம்
(5) ஷாகாதயனம்
(6) ஸ்போர்டாயனம்
 
அனுமான் இளமையில் சூரியனின் ரதத்திற்கு முன் சென்று இந்த நவ வியாகரணங்களைக் கற்றறிந்தார்.]

வித்யா தத்துவ அதிதேவனாக விள்ங்கும் முருகபிரான் முடியில் நவவியாகரணங்கள் நவமணிகளாக அமைந்துள்ளது என்பது பொருத்தம் தானே!

"நவவியாகரணமே நன்மாமணியாக நவ வடிவு கொண்ட தனிக்குமரன்" (குமரன் குறவஞ்சி). இவ்விதமான நவமணி இழைத்த ஆறு திருமுடிகள் அணிந்த ஆறு முக மலர்களைத் தேவர், அதிதேவர், தேவாதிதேவரான மகாதேவர் சேவை செய்கிறார் என்று நம் அருணை அண்ணல் விராலிமலைத் திருப்புகழில் கூறுவதைப் படியுங்கள்.

 "சீரான கோல கால நவமணி
  மாலாபிஷேக பார வெகுவித
  தேவாதி தேவர் சேவை செயு முகமலராறும்
  ...நாளும் நினைவது பெறுவேனோ."

ஆகையால் ஆறு முடிகள் அணிந்த தலைவ!
போற்றி போற்றி என்று பாம்பன் அடிகள் பாடுகிறார்.
 
[5ஷட்கோண பதயே நமோநம
ஷட்- ஆறு
கோணபதயே- கோணச்சக்கரத்தில் எழுந்தருளியுள்ள தலைவனுக்கு
நமோநம- போற்றி போற்றி.
ஆறு கோணத் தலைவனுக்குப் போற்றி போற்றி என்பது பொருள்.
 
உபாசனை முறை
"குருவருள் இன்றி அருள்வரல் இன்றே" என்பது பாம்பனடிகளின் ஞானவாக்யம். ஆதலின் ஒரு குருவின் மூலம் உபதேசம் பெறுவது அவசியம். ஆசிரியன் உபதேசம் செய்யும்போது அதற்குரிய உபாசனா மூர்த்தியையும், அவரது திருவுரு சிறப்பியல் முதலியவற்றோடு அவருக்குரிய மந்திர முதலியவற்றையும் விளக்கிக் கூறுவான். இம்முறையிலே அம்மூர்த்தியை மந்திர பூர்வமாக அமைக்கத்தக்க எந்திரங்களையும் குறிப்பதுண்டு. ஆறுமுக அண்ணலுக்கு அமைந்தது அறுகோண யந்த்ரம். தேவிக்குரியது 43 கோணமுடையது என்பர். ஸ்ரீசக்ரம் இல்லாத அறுகோணமாக அமைந்த மந்திர பீடத்தில் முருகவேள் எழுந்தருளி இருந்து அருள் புரிவார். ஷண்முகருக்கு உரிய சஹஸ்ரநாமத்திலும் "ஷட்கோண மத்ய நிலையாய நம:" என்று படிக்கப்படுகிறது. இவ்வித ஆறுகோண சக்ரம், ஓங்காரமான ப்ரணவத்தின் நடுவில் அமைக்கப்படும். ஆடும் மயில் தனி மந்திரமான பிரணவ ரூபமுடையது. அதன்மேல் அமரும் குமரபிரான் பிரணவ நடுவான ஆறு கோண சக்ரத்தில் எழுந்தருளுவான்.

"அதல விதல முதல் கிடுகிடுவென வரு மயில் இனிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே" என்று திரு வேங்கடத் திருப்புகழ் கூறுவது நோக்குக. எனவே அறு கோணத் தலைவன் என்கிறார் அடிகளார்.ஆறுமுகனை, ஆறுகோண சக்ரத்தில் வைத்து வழிபடுவது பொருத்தம் தானே.
 
[6] ஷட்கோச பதயே நமோநம
ஷட்-ஆறு
கோச- கோசங்களினுடைய
(கோசம் என்பது செல்வம் என்று பொருள் படும்).
பதயே- தலைவனுக்கு
நமோநம- போற்றி போற்றி
 
(1) ஷட்+ கோசம் = ஆறு செல்வங்கள், அவை முறையே அரசு, சுற்றம், பொன், நெல், கல்வி, வாகனம் அல்லது அடிமை (தொண்டர்கள்) எனப்படும். இல்லாத ஆறு செல்வங்களுக்கும் தலைவன் முருகன் என்க. புலமை, தலம், புகழ், போகம், ஞானம், முக்தி எனும் ஆறு செல்வங்களும் கொள்ளலாம். எனவே மேற்சொன்ன செல்வங்களுக்கெல்லாம் குகவேள் தலைவன். 
  
ஆதலால் அவனை வணங்குவோர் அச்செல்வங்கள் அனைத்தையும் பெறுவர் என்றறிக.செல்வம் முதலிய எல்லாச் சிறப்புக்களும் கந்தநாதன் கழலிணையைக் கைத்தொழுதமையாலேயே வந்தன.

     "சிறப்புளார்கள் சிறப்பெலாம் இறப்பிலா உன்
      இணைப்பதம் குறித்து நோற்ற குறிப்பலோ
      பொறிச் சமீக புரத்தனே" [பாம்பன் சுவாமிகள்]

(2) கோசம்- புத்தகம், சாத்திரம் அல்லது தோத்திர நூல்கள். ஷட்கோசம் என்பது அறுசமய சாத்திர நூல்கள் என்று கொண்டு அறு சமய நூல்களின் உட்பொருளாய் அமைந்த தலைவன் என்று கொள்க.

'அறு சமய சாத்திரப் பொருளோனே'- திருப்புகழ்
ஷட்கோசம் ஆறு தோத்திர நூலகள் என்னில் பாம்பன் அடிகளால் 'ஒருவரையே புகழ்ந்த அருணகிரி' எனப் புகழ் பெற்ற முனிவரது தனிப்பெரு நூலகள் கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், திருவகுப்பு, திருஎழுகூற்றிருக்கை என்ற ஆறு நூல்களைக் கொள்ளலாம். ஏனெனில் பாம்பன் அடிகளுக்கு நம் அருணகிரியாரிடத்திலும் அவரது அரிய தோத்திரப் பனுவல்களிலும் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. பாம்பன் அடிகள் தான் அருளிய நூல்களை ஆறு மண்டலங்களாகப் பிரிவு செய்துள்ளார். ஆகவே 'பன்னிருவாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே' என்றது போல ஆறுமுகனுக்கென பாடிய 6666 பாடல்கள் கொண்ட ஆறு மண்டல நூல்களின் தலைவன் என்றும் பொருள் கொள்ள இடம் இருக்கிறது .இதுகாறும் கூறியதிலிருந்து நம் குமர பகவன் ஆறுவகைப் பேறுகளுக்கும் ஆறு சமயம் அல்லது ஆறு வகையான சாத்திர தோத்திர நூலகளுக்கும் தலைவன் என்பதும் விளங்குகிறது.
 
(3) கோசம்- தாமரை. நமக்குள் இருக்கும் ஆதார கமலங்கள் ஆறு ஆகும். அவை

மூலாதாரம்-       [குய்யத்திற்கும் குதத்திற்கும் நடுவிடம்] நான்கு இதழ் கமலம்,
சுவாதிஷ்டானம்-  [அடிவயிறு] ஆறு இதழ் கமலம்
மணிபூரகம்-      [உந்தி] பத்து இதழ் கமலம்
அநாகதம்-        [இதயம்] பன்னிரண்டு இதழ் கமலம்
விசுத்தி -        [கண்டம்] பதினாறு இதழ் கமலம்
ஆக்ஞை-         [புருவ மத்தி] மூன்று இதழ் கமலம்
  
ஆகையால் ஷட்கோச பதயே என்றால் ஆறாதார கமலத்து அதிதேவதைகளின் தலைவனுக்கு எனும் பொருள் கிடைக்கிறது. செவ்வேள் ஆறாதாரத் தெய்வம் என்பதனை 'வீராதாரா ஆறாதாரா' (பாலாய் நூலாய்) எனவும் 'ஆதாரத் தொளியானே' எனவும் 'நாலிரண்டிதழாலே' எனும் பொதுத் திருப்புகழும் 'நாலு சதுரத்த' (புலியூர்) என்ற திருப்புகழும் சிந்திக்கத் தக்கன. ஆதார கமலங்கள் ஆறின் தலைவா! உனக்கு வணக்கம் என்றும் பொருளாகிறது.

Copyright © 2014 Murugan Bhakti, All rights reserved.


unsubscribe from this list    update subscription preferences 

Email Marketing Powered by Mailchimp